களைச்செடிகளில் உருவாக்கப்படும் புதிய எரிபொருள் 'பிரிக்வெட்ஸ்!' தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடிவு

கூடலுார்; நீலகிரியில் ஐகோர்ட் உத்தரவின் கீழ் அகற்றப்படும் களைச் செடிகளை பயன்படுத்தும் வகையில்,'பிரிக்வெட்ஸ்' என்ற எரிபொருளை உற்பத்தி செய்து, தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், சென்னை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில், முதுமலை மற்றும் பிற வனப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் வளர்ந்துள்ள உண்ணி செடிகள் மற்றும் பிற அன்னிய செடிகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். இதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ்குமார், பாரத் சக்கரவர்த்தி ஆகியோர், 2023ல் முதுமலை, மசினகுடியில் உண்ணி செடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, இப்பணிகளை கண்காணிக்க ஐகோர்ட்டில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், மார்ச் மாதம் முதுமலை, மசினகுடி பகுதிகளில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின், ஐகோர்ட் உத்தரவுப்படி, நீலகிரி வனப்பகுதிகளில் அகற்றப்படும் உண்ணி செடிகளை, பயன்படுத்தி உலர்த்தி, இயந்திரம் மூலம் 'பிரிக்வெட்ஸ்' எனப்படும் எரிபொருளை தயாரித்து விற்பனை செய்யும், தொழிற்சாலையை மசினகுடி பகுதியில் வனத்துறையினர் அமைத்து வருகின்றனர்.

எரிபொருள் தயாரிப்பு முறை



நீலகிரி வனப்பகுதிகளில் மாதத்தில், 124 ஏக்கர் பரப்பில் அகற்றப்படும் அன்னிய செடிகளை நன்று உலர வைத்து, புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில், 'பிரிக்வெட்ஸ்' தயாரிக்கப்படும்.

அவை நீலகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு எரிபொருளாக விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த புதுமை முயற்சியால் துவக்கத்தில் பல பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், 'ஐகோர்ட் உத்தரவுப்படி, அகற்றப்படும் உண்ணி செடிகள் மற்றும் பிற வேறு அன்னிய களை செடிக்களை நன்கு உலர வைத்து, புது வகையான எரிபொருளை தயாரிக்கும் தொழிற்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்த எரிபொருளால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. வரும் காலங்களில் இதனை அதிகளவில் உற்பத்தி செய்யவும் வாய்ப்பு உள்ளது,' என்றனர்.

Advertisement