ஏரி, அணைகளில் வரையறையின்றி மண் அள்ளுவது தடுக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 500க்கும் மேற்பட்ட ஏரிகளும், 2 அணைகளும் உள்ளன. நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், விவசாய நிலங்களை சமன்படுத்தவும் வண்டல் மண் எடுக்க அரசு ஒப்புதல் வழங்குகிறது.

வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா மற்றும் அடங்கல் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தாசில்தார் விண்ணப்பத்தை சரிபார்த்து, எவ்வளவு யூனிட் மண் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு ஒப்புதல் அளிப்பார்.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்த வரை விவசாயிகள் பெயரில், அரசியல் பிரமுகர்கள் விண்ணப்பித்து, ஒப்புதல் பெறுகின்றனர். தொடர்ந்து, நீர்நிலைகளில் டிப்பர் லாரிகளை இறக்கி, வண்டல் மண்ணுக்கு பதிலாக கிராவல் மண்ணை அள்ளி, வெளிப்பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

எவ்வளவு மண் எடுக்க வேண்டும், எந்த பகுதியில் எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மண் அள்ளுபவர்கள் பின்பற்றுவதே இல்லை.

தங்கள் விருப்பத்திற்கேற்ப மண்ணை அள்ளிச் செல்கின்றனர்.

மண் அள்ளுவதை முக்கிய தொழிலாகவே மேற்கொண்டு வருபவர்களை போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

இதனால், ஒரு சில இடங்களில் விடிய, விடிய கிராவல் மண் திருடப்பட்டு வருகிறது.

ஒரு சில நேர்மையான அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பயந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் சைலண்டாக உள்ளனர்.

இதனால் நீர்நிலைகளில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்படுவதால் மழைக்காலங்களில் நீர் நிலைகள் நிரம்பும்போது நீரில் மூழ்கி இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, மாவட்டத்தில் வரைமுறையின்றி மண் அள்ளுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement