குவா... குவா... சத்தம் கேட்டால் போதும் ரூபா... ரூபா... என அடம் பிடிக்கும் ஊழியர்கள்

கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் அரசு மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பரிசோதனைக்காகவும், பிரசவத்திற்காவும் இங்கு வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருப்பவர்களுக்கு பிரசவத்திற்கான தேதி தோராயமாக வழங்கப்படும்.

அந்த தேதியின்படி, பிரசவ வலி ஏற்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே, கர்ப்பிணிகளை அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வருவர்.

அவ்வாறு வருபவர்களை முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதித்து, வலி ஏற்பட்டதும் நார்மல் அல்லது சிசேரியன் முறையில் பிரசவம் பார்ப்பது வழக்கம்.

குழந்தை பிறந்ததும், பிரசவித்த பெண்ணின் குடும்பத்தினரிடம் 1,500 ரூபாய் பணம் தருமாறு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கேட்கின்றனர்.

எதற்கு பணம் தர வேண்டும் என கேட்டால், குழந்தையை சுத்தம் செய்ய வேண்டும், துணிகளை மாற்றி வேறு வார்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது போன்ற காரணங்களை தெரிவிக்கின்றனர்.

இதனால் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய பொதுமக்கள் கடும் சிரமமடைகின்றனர்.

பணம் தர மறுத்தாலோ அல்லது குறைவாக பணம் வழங்கினாலோ குழந்தையை சுத்தம் செய்வதிலும், வேறு வார்டுக்கு மாற்றுவதிலும், உறவினர்களிடம் குழந்தையை காண்பிப்பதிலும் தாமதப்படுவத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement