77 ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., மிஷினுடன் தராசுகள் இணைப்பு மே இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் அமல்

தேனி: மாவட்டத்தில் போடி, உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 77 ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., மிஷினுடன் மின்னனு தராசுகள் இணைத்து பயன்பாட்டிற்கு வந்தன.

மாவட்டத்தில் 403 முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்.,( விற்பனை முனையம்) கருவிகளுடன் 'புளூ டூத்' மூலம் மின்னனு தராசுகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் தராசில் என்ன பொருள், எத்தணை கிலோ எடையில் வழங்கப்படுகிறது என்பது பி.ஓ.எஸ்., மிஷினில் பதிவாகும். அந்த பொருளுக்கு ரசீது வழங்கப்படும். இந்த விபரம் சர்வர் மூலம் உணவு பொருள் வழங்கல் துறையில் பதிவாகும்.

இதன் மூலம் நுகர்வோருக்கு எடை குறைவில்லாமல் ரேஷன் பொருட்கள் பெறலாம். வழங்கப்பட்ட பொருளின் எடை கடை இருப்பில் இருந்து கழித்துக்கொள்ளப்படும். இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போடியில் ஒரு கடையில் சோதனைமுறையில் ஒரு மாதத்திற்கு முன் அமல்படுத்தப்பட்டது.

தற்போது போடி தாலுகாவில் மேலும் 52 , உத்தமபாளையம் தாலுகாவில் 24 என மொத்தம் மாவட்டத்தில் 77 ரேஷன் கடைகளில் இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மே இறுதிக்குள் அனைத்து கடைகளுக்கும் செயல்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய நடைமுறையில் சில ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் ஒவ்வொரு பொருளாக பதிவு செய்து எடைபோட்டு ரசீது வழங்குவதால் பொருட்கள் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. முன்னர் ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் வரை பொருட்கள் வழங்க முடிந்த நிலையில், தற்போது 10 பேருக்கு பொருட்கள் வழங்க முடியாமல் தடுமாறுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement