ஈ.வெ.ரா., பற்றி அவதுாறு பேச்சு சீமான் மீது வழக்கு பதிய உத்தரவு

திருச்சி: ஈ.வெ.ரா., பற்றி அவதுாறு பேசியதாக வக்கீல் தொடர்ந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 9ம் தேதி அன்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் அளித்த பேட்டியில், ஈ.வெ.ரா., பேசியதாக, ஆபாசமான கருத்துக்களை வெளிப்படையாக கூறியிருந்தார். இது, ஈ.வெ.ரா.,வை அவமானப்படுத்தும் செயல் என்று, திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த அரசு வக்கீலான முரளி கிருஷ்ணன் புகார் அளித்தார்.

புகாரின்படிபோலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் கடந்த, மார்ச், 6ம் தேதி, மணப்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அசோக்குமார், சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த, மணப்பாறை இன்ஸ்பெக்டருக்கு நேற்று உத்தரவிட்டார்.

திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமாருக்கும், நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பிரச்னை உள்ள நிலையிலும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் சீமான் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரே, தற்போது போலீசார் வழக்கு பதிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement