லாரியில் கார் மோதி கோர விபத்து ஓசூரை சேர்ந்தவர் உட்பட 5 பேர் பலி

1

திருப்பதி: திருப்பதிக்கு சென்று காரில் திரும்பிய போது, கன்டெய்னர் லாரியில் கார் மோதிய விபத்தில், ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் விகாஸ் நகர் அருகே எம்.எஸ்., கார்டன் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன், 42; தனியார் நிறுவன ஊழியர்.

இவர் தன் மகன் கிருஷ்வின், 15, பெங்களூரைச் சேர்ந்த உறவினர்களான விஜயலட்சுமி, 50, அதே பகுதியை சேர்ந்த சஹானா, 34, ரஜினி, 27, ரங்கேகவுடா மகன் லெகன்கவுடா, 11, கீதாம்மா, 51, ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.

அங்கு தரிசனம் செய்து விட்டு, நேற்று மீண்டும் ஊருக்கு மாருதி சுசூகி எர்டிகா காரில் திரும்பினர்.

தியாகராஜன் காரை ஓட்டினார். திருப்பதி - சித்துார் தேசிய நெடுஞ்சாலையில், பாகலா அருகே, தோட்டப்பள்ளி பகுதியில் நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியது.

இதில், காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணம் செய்த தியாகராஜன், விஜயலட்சுமி, சஹானா, ரஜினி, சிறுவன் லெகன்கவுடா ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கீதாம்மா மற்றும் தியாகராஜன் மகன் கிருஷ்வின் ஆகிய இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் குறித்து பாகலா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement