அமைதி பூங்காவா தமிழகம்? முதல்வர், அமைச்சர்களுடன் வானதி வாக்குவாதம்
சென்னை : தமிழகம் அமைதி பூங்காவா என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுடன், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - வானதி: தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., 2014ல் ஆட்சிக்கு வந்தபின், சென்னை -- யாழ்ப்பாணம் விமான சேவையும், நாகை -- காங்கேசன் துறைமுகம் இடையே பயணியர் கப்பல் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
ஆனால், 'சிங்களத் தீவுனுக்கோர் பாலம் அமைப்போம்' என்ற பாரதியாரின் கனவு, இன்னும் நனவாகவில்லை. எனவே, தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை பாலம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தையும், இலங்கையையும் சாலை வழியாக இணைத்தால், இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகள் வளர்ச்சி அடையும். அப்போது, இலங்கை செல்ல விரும்பும் அகதிகள் அங்கு செல்வர்.
நாள்தோறும் செய்திகளைப் பார்க்கும்போது, தமிழகம் அமைதிப் பூங்கா என்ற சூழல் மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம், என் மனதில் ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு: உங்களை இந்த அரசு பாதுகாக்கும்.
வானதி: எனக்கு கொடுப்பது போன்ற பாதுகாப்பை, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: இந்தியாவிலேயே, மக்கள் சுதந்திரமாக நடமாடும் மாநிலம் தமிழகம்.
அமைச்சர் துரைமுருகன்: உ.பி., மாநிலம் வாரணாசியில், 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். எல்லா இடங்களிலும் சிலர் கெட்டவர்களாக இருப்பர்.
ராமாயணத்திலேயே பெண்ணை கடத்தி விட்டனர். குற்றம் நடப்பது சகஜம். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும்.
அமைச்சர் கீதா ஜீவன்: பெண்கள் பாதுகாப்பில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2022ம் ஆண்டு குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரங்கள்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில், தேசிய சராசரி 4.7 சதவீதம்; தமிழகத்தில், 1.1 சதவீதமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் தேசிய சராசரி, 66.4 சதவீதம்; தமிழகத்தில், 24 சதவீதம்.
வானதி: அமைச்சர் சொன்னது, 2022ம் ஆண்டு புள்ளிவிபரம். ஆள் பற்றாக்குறை, உடல்நல பாதிப்பு, மன அழுத்தம் இருந்தாலும், தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது.
ஆனாலும், குற்றச்செயல்கள் நடப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பாலின உணர்திறன் குறித்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஐ.எஸ்., அல் குவைதா போன்ற பயங்கரவாத குழுக்களை நாடி இளைஞர்கள் செல்வதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில், வங்கதேச நாட்டவர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
அவர்கள் வாயிலாக, தேசவிரோத குற்றங்கள் நடக்காமல் இருக்க, காவல் துறை கண்காணிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்தில் மதவாதம் இருப்பதாக சொல்கிறார். எங்கே இருக்கிறது மதவாதம்?
வானதி: 2022ல், கோவையில் கார் வெடிகுண்டு விபத்து நடந்ததே.
முதல்வர் ஸ்டாலின்: பா.ஜ., ஆளும் மாநிலத்தில் என்ன நடந்தது? பிரதமர் மோடி கூட அங்கு செல்லவில்லை.
வானதி: கோவை குண்டுவெடிப்பு நடந்த இடத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். பா.ஜ., பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
பூந்தமல்லி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளின் நிலை பற்றி, தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும். காஷ்மீர் போல தமிழகம் மாறாமல் தடுக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்: ஆடிட்டர் ரமேஷ் கொலை, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்தது. அது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
காஷ்மீரில் நிகழ்ந்தது போன்று, தமிழகத்தில் நிச்சயமாக நடக்கவே நடக்காது.
காஷ்மீரில் நடந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது கூட, மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு பற்றி, இதுவரை நாங்கள் பேசவில்லை.
அந்தச் செய்தியை கேள்விப்பட்டவுடன், 'காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும், தமிழகம் நிச்சயமாக உறுதுணையாக இருக்கும்' என்று தான் சொல்லியிருக்கிறோம். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் மதவாதம் நுழைய முடியாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும்
-
தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை
-
ரீல்ஸ் மோகத்தில் சேட்டை; கோவிலில் வீடியோ எடுத்தவர்கள் மீது போலீசில் புகார்!
-
பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
-
லாரி டிரைவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறமை வேண்டும்: அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு
-
பஹல்காம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
-
சிகிச்சையில் சிறுத்தை மரணம்: வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை