'ஹாட் ஸ்பாட், பிளாக் ஸ்பாட்' விபத்து பகுதி ரூ.870 கோடியில் சீரமைப்பு

சென்னை: ''தமிழகத்தில், 1,942 விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு, 870 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - ஓ.எஸ்.மணியன்: சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க, சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

அமைச்சர் வேலு: சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளை, மாநில நெடுஞ்சாலைகளில், 'ஹாட் ஸ்பாட்' என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில், 'பிளாக் ஸ்பாட்' என்றும், இரண்டு வகைகளில் அடையாளம் காணப்படுகின்றன. இந்த விபத்து பகுதிகளை சீர் செய்வதற்கு, அ.தி.மு.க., ஆட்சியில், 600 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டது.

தி.மு.க., ஆட்சியில், நான்கு ஆண்டுகளாக, 1,500 கோடி ரூபாயில், இந்த பகுதிகளில் விபத்துகளை தடுக்க, சாலை பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்காக, 22 மாவட்டங்களில் சாலை விபத்துகள் குறைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.

'ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்' மற்றும் போக்குவரத்து தொடர்புடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து, அரசு சார்பில் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில், 1,942 விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு, 870 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

சாலை சந்திப்புகளை பொறுத்தவரை, விபத்து நடக்கும் 1,487 இடங்கள் கண்டறியப்பட்டு, 865 இடங்களில், சீரமைப்பு மற்றும் தடுப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. சாலைகளில், 'வேகத்தடையை கண்டபடி அமைக்கக்கூடாது; ஐ.ஆர்.சி., எனப்படும், இந்திய சாலை குழுமம் விதிகளுக்கு உட்பட்டு அமைக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement