பள்ளி மாணவனை கொன்ற கல்லுாரி மாணவன் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே மாதவபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் விஷ்ணு பரத், 17; பிளஸ் 1 தேர்வு எழுதியிருந்தார். அப்பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவிற்கு, நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சென்றார். நள்ளிரவில் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லுாரி மாணவர் சந்துரு, 21, வந்துள்ளார். இவர் பகுதி நேர ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

விஷ்ணு பரத் உள்ளிட்டோரை பார்த்து, 'நீங்கள் நாளை கோவில் திருவிழாவுக்கு வரக்கூடாது' என சந்துரு கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட மோதலில், சந்துரு ஆட்டோ சாவியில் இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால், விஷ்ணு பரத்தின் விலா மற்றும் பின் பகுதியில் குத்தினார்.

பலத்த காயமடைந்த விஷ்ணு பரத்தை, தன் ஆட்டோவிலேயே துாக்கிப் போட்டு கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவலறிந்த விஷ்ணு பரத்தின் பெற்றோர், உறவினர்கள் அவரை தேடினர். அப்போது, சந்துரு தன் ஆட்டோவில் விஷ்ணு பரத் உடலை கொண்டு வந்து, அவர் வீட்டின் முன் வீசிவிட்டு தப்பி விட்டார். அவரை கூடங்குளத்தில் போலீசார் கைது செய்து, கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

Advertisement