தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை; தோட்டக்கலை துறையினர் தகவல்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தர்பூசணி தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் செயற்கை நிறமி எதுவும் கலப்பதில்லை என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, தர்பூசணி நிலங்களில் தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, தர்பூசணியில் செயற்கை நிறமிகள் எதுவும் கலப்படம் செய்யவில்லை என தெரிவித்தனர்.

தர்பூசணியில் நீர்ச்சத்துடன் அதிகளவில் இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

கோடை காலத்தில் கிடைக்கும் இதனை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைப்பு செய்து 3 மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. பராமரிப்பை பொறுத்து ஒரு எக்டருக்கு 25 முதல் 30 டன் வரை மகசூல் பெறலாம்.

இந்நிலையில் தர்பூசணியில் செயற்கை நிறமிகள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் சின்னசேலம், புக்கிரவாரி, எரவார் உள்ளிட்ட பகுதியில் தர்பூசணி சாகுடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தோட்டக்கலைத்துறை மாவட்ட துணை இயக்குநர் சிவக்குமார் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து தர்பூசணியில் எவ்வித செயற்கை நிறமிகளும் கலப்படம் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement