இங்கிலாந்து தொடரில் ஆயுஷ்

புதுடில்லி: இங்கிலாந்து செல்லவுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் ஆயுஷ் மாத்ரே, வைபவ் இடம் பெறலாம்.
ஜிம்பாப்வே, நமீபியாவில் வரும் 2026, ஜனவரியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள், தலா 4 நாள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது.
முதலில் ஒருநாள் தொடர் ஜூன் 27ல் ஹோவில் துவங்குகிறது. 2, 3வது போட்டிகள் நார்த்தாம்ப்டனில் (ஜூன் 30, ஜூலை 2) நடக்கும். கடைசி இரு போட்டிகள் வொர்செஸ்டரில் (ஜூலை 5, 7) நடக்க உள்ளன. அடுத்து ஜூலை 12-15, 20-23ல் டெஸ்ட் போட்டிகள் செல்ம்ஸ்போர்டில் நடக்கும். இதே நேரத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஜூன் 20ல் துவங்கவுள்ள ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.
இதனிடையே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது நடக்கும் பிரிமியர் தொடரில் சிறப்பாக செயல்படும் ராஜஸ்தானின் 14 வயது வீரர் வைபவ், சென்னையில் 17 வயது ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்படலாம். இதனால் சர்வதேச அரங்கில் ஜொலிக்க, இத்தொடர் உதவியாக இருக்கும்.

Advertisement