குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது! பூண்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

அவிநாசி, ; திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார்.

கவுன்சிலர்களின் விவாதம்:

லதா (அ.தி.மு.க.,): டெண்டர் விடப்பட்டு நடைபெறும் ரோடு மற்றும் சாக்கடை பணிகள் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தெரிவிப்பதில்லை. பலமுறை கூட்டத்தில் தெரிவித்தும் கூட தலைவர், கமிஷனரும், கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை. எந்தப் பணிகள் எப்போது துவங்குகிறது என பொதுமக்களிடம் பதில் கூற முடியாமல் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. (இவ்வாறு கூறி, வெளிநடப்பு செய்தார்)

தங்கவேலு (இ.கம்யூ,): 16வது வார்டில், குடிநீர் விஸ்தரிப்புக்காக டெண்டர் விடப்பட்ட, 3 மாதமாகியும் பணிகள் நடக்கவில்லை. ஒப்பந்ததாரர் பணிகளை துவங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். புதிதாக பைப் அமைக்க தார்ரோடு முழுவதும் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

சுப்பிரமணி (மா.கம்யூ.,): வார்டுகளில் சாக்கடை பணிகளுக்காக பொது நிதியிலிருந்து சிறிதுசிறிதாக நிதிகள் ஒதுக்கி பணிகள் துவங்க வேண்டும். 9, 10, 22 மற்றும் 23 ஆகிய வார்டுகளில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. கூடுதலாக குடிநீர் வினியோகத்துக்கு இணைப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.

லீலாவதி (இ.கம்யூ.,): 24வது வார்டில் அம்பேத்கர் நகர் பகுதியில் சமுதாய நலக்கூடம் பராமரிப்பு பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. பொதுக்கழிப்பிடம் விரிவுபடுத்தி கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு அதுவும் பாதியில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்காமல் ஒப்பந்ததாரர்கள் இழுத்தடிக்கின்றனர்.

தங்கம் (அ.தி.மு.க.,): வெற்றிவேல் நகர் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியை பலமுறை கோரிக்கை அளித்தும் முடிக்கவில்லை. கேட்டால், நிதி இல்லை என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஆனால், ஆளுங்கட்சி வார்டுகளுக்கு மட்டும், 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற டெண்டர் விடப்பட்டுள்ளது.

எங்கள் வார்டுக்கு நிதி இல்லை. ஆனால் மற்ற வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்குகிறது.

(இவ்வாறு கூறி வெளிநடப்பு செய்து, அலுவலகம் முன், துண்டை விரித்து, நகராட்சிக்கு நிதி வழங்க பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது)

காயத்ரி (அ.தி.மு.க.,) : 3வது வார்டு கிழக்கால தோட்டத்தில், சாக்கடை நிரம்பி வீடுகளுக்குள் திரும்பிச் செல்கிறது. குடிநீர் குழாய்களை சாக்கடை கழிவு நீர் சூழ்ந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளரிடம், இது பற்றி கூறினால்,'என்னை டார்ச்சர் செய்யக் கூடாது. எப்போது செய்வது என நான் தான் முடிவு செய்ய வேண்டும்,' என்கிறார்.

கார்த்திகேயன் (அ.தி.மு.க.,): எம்.ஜி.ஆர்., நகர் நுழைவாயிலில் உள்ள குழியை மூட கேட்டு, 3வது முறையாக கூட்டத்தில் பேசுகிறேன். டீ பப்ளிக் ஸ்கூல் செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை. குப்பை அள்ள ஆட்கள் வருவதில்லை. புகார் அளித்தால் சுகாதார ஆய்வாளர், மரியாதை குறைவாக பேசுகிறார். தலைவரும் எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. (இவ்வாறு கூறி வெளிநடப்பு செய்தார்)

கூட்டம் குறித்து, நகராட்சி தலைவர் குமார் கூறுகையில், ''அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் செய்து தர ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement