ஆற்றில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வால்பாறை : வால்பாறை மலைப்பகுதியில் உள்ள ஆறுகளில், மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை வளம் நிறைந்து காணப்படும் வால்பாறையில், பல்வேறு ஆறுகளில், அனுமதியின்றி மணல்கொள்ளை நடக்கிறது. குறிப்பாக, நல்லகாத்து ஆறு, சோலையாறு, கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மணல் கொள்ளை நடக்கிறது.

ஆற்றில் அத்துமீறி மணல் எடுக்கும் இந்த கும்பல், சிறு, சிறு மூட்டைகளாக கட்டி ஆட்டோக்களில் கடத்தி செல்கின்றனர். ஆற்றில் அள்ளப்படும் மணல்களை, கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் விற்பனை செய்கின்றனர்.

ஆளும்கட்சியின் ஆசியோடு மணல் கொள்ளை நடப்பதால், வருவாய்த்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனவே, கோவை மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, வால்பாறையில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement