ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்: கலெக்டர் துவக்கி வைப்பு

கடலுார் : புவனகிரி அடுத்த தெற்குத்திட்டையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த துணை உணவுகள் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பின், மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முந்திரிக்கொட்டை உடைக்கும் கருவிகள் வழங்கி பேசுகையில், 'மேல் புவனகிரி மற்றும் நல்லுார் வட்டாரங்களில், 38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த துணை உணவுகள் வழங்கி உடல் நலத்தை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நல்லுார் வட்டாரத்தில் 820 குழந்தைகள், மேல்புவனகிரி வட்டாரத்தில் 790 குழந்தைகள் என மொத்தம் 1610 குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து மிகுந்த துணை உணவுகள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேல்புவனகிரி பகுதியில் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய 5 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவிற்கு 12 நபர்கள் என மொத்தம் 60 நபர்கள் கொண்ட வாழ்வாதார தொழிற் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தெற்குதிட்டை கிராமத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 425 ரூபாய் மதிப்பில் முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிற்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைத்து கொள்முதலை நெறிப்படுத்துவதன் மூலம் உற்பத்தியாளர்கள் சரியான விலையை பெற முடியும்' என்றார்.

தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில்20 பேருக்கு பால் பண்ணை அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கினார்.

விழாவில், சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement