தாலுகா அளவில் மழை மானிகள் அமைத்து... ஓராண்டுக்கு மேலாச்சு! முழுமையாக செயல்படாததால் அதிருப்தி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்ட மழை மானிகள் செயல்பாடு இன்றி காட்சிப்பொருளாக உள்ளன. இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவை கணக்கீடும் வகையில், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம், மற்றும் மாக்கினாம்பட்டியில் உள்ள பி.ஏ.பி., அலுவலகத்தில் மழை அளவீடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிலும், தலா ஐந்து இடங்கள் தேர்வு செய்து கடந்தாண்டு தானியங்கி மழை மானி பொருத்தப்பட்டன.

பொள்ளாச்சி தாலுகாவில், ராமபட்டிணம் ஊராட்சி அலுவலகம், கோலார்பட்டி, பெரிய நெகமம் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், சிஞ்சுவாடி மற்றும் பொள்ளாச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் தானியங்கி மழை மானி பொருத்தப்பட்டன.

ஆனைமலையில் தாலுகா அலுவலகம், பெரியபோது ஊராட்சி அலுவலகம், கோட்டூர் ரிசர்வ் சைட், ஜல்லிபட்டி ஊராட்சி அலுவலகம், சுப்பேகவுண்டன்புதுார் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இவை அமைக்கப்பட்டன.இவை, மைதானம் போன்ற திறந்தவெளி இடமாக தேர்வு செய்யப்பட்டு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டால், மழையளவு விபரங்கள், வானிலை முன்னறிவிப்புகள் உடனுக்குடன் தெரிவிக்க முடியும். வெப்பநிலை, குளிர் போன்ற தகவல்களும் எளிதாகவும், துல்லியமாக கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தானியங்கி மழைமானிகள் செயல்பாடின்றி காட்சிப்பொருளாக இருப்பதால் மழையளவு உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தமிழக அரசின் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறையின் கீழ், தமிழகம் முழுவதும், 1,400க்கும் மேற்பட்ட இடங்களில், தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டது.

பல மாவட்டங்களில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தாலும், இன்னும் பல இடங்களில் மழைமானிகள் சரிவர செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில், 54 மழைமானிகள் ஒதுக்கப்பட்டன. இணையதளத்தில் பரிசோதனை அடிப்படையில் ஆரம்ப காலத்தில் மழையளவு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 'அப்பேட்' செய்யப்பட்டது.

ஓராண்டு கடந்த நிலையில், பல மழை மானிகள் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளன.

ஆச்சிப்பட்டி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, சுப்பேகவுண்டன்புதுார், கோட்டூர், கிணத்துக்கடவு, கோலார்பட்டி, வால்பாறையில், 10க்கும் மேற்பட்ட மழைமானிகள் செயல்படுவதே இல்லை. அவற்றை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டால் முறையான பதில் தெரிவிப்பதில்லை. தற்போது, கோடை மழை பெய்கிறது. விரைவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்க உள்ளது.

மழைமானிகள் செயல்படாமல் உள்ளதால், மழை அளவுகள் தெரியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவர். இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

துவக்க விழாவே நடக்கலையாம்!

மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் அமைக்கப்பட்ட, 54 மழை மானிகள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது, பரிசோதனை அடிப்படையில், சென்னையில் இருந்து 'ரீடிங்' எடுத்து பதிவு செய்கின்றனர். அங்குள்ள அதிகாரிகள், மழை மானிகள் சரியாக இயங்குவதாக தெரிவித்துள்ளனர்.மேலும், மற்ற இடங்களிலும் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து மழை மானிகளும் துவக்க விழா போன்று நடத்தி, செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னைக்கு செல்லும் மழையளவு குறித்து தகவல்கள் மாவட்டத்திலும் பார்ப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்,' என்றனர்.

Advertisement