'புதிதாக 3,363 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வு'

சென்னை: ''ஒன்பது போலீஸ் நிலையங்கள், ஒரு ரயில்வே போலீஸ் நிலையம் உருவாக்கப்படும். புதிதாக, 2,833 காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 350 தீயணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள்:

போலீஸ் நிலையங்கள்



கோவை மாவட்டம் நீலாம்பூர்; சிவகங்கை மாவட்டம் கீழடி; திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல்; திருப்பூர் மாவட்டம் பொங்கலுார்; கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதுார்; நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை; திருவண்ணாமலை கோவில்; மதுரை சிந்தாமணி, மடக்குளம் ஆகிய இடங்களில், புதிதாக போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்படும்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், புதிதாக ரயில்வே போலீஸ் நிலையம் உருவாக்கப்படும்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்; நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி; நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதிகளில், புதிதாக காவல் உட்கோட்டம் ஏற்படுத்தப்படும்

செங்கல்பட்டு மாவட்டத்தில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு புதிய அலகு உருவாக்கப்படும்

மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலகுகள் ஏற்படுத்தப்படும்

280 போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, சப் - இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், 90; தர்மபுரியில் 135 ஆயுதப்படை காவலர் குடியிருப்புகள்; ஆறு உதவி கமிஷனர், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 22 சப் - இன்ஸ்பெக்டர்கள், 255 போலீசாருக்கு என, 321 காவலர் குடியிருப்புகள், 143.16 கோடி ரூபாயில் கட்டப்படும்

ஆயுதப்படை போலீசார் தங்க வசதி இல்லாத அல்லது குறைவாக உள்ள, 20 மாவட்டங்களில், 50 படுக்கை வசதிகள் கொண்ட காவலர் தங்குமிடங்கள், 30 கோடி ரூபாயில் கட்டப்படும்

கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு, கோவை மாநகரத்தில் அலுவலக கட்டடம் கட்டப்படும்

தொழில்நுட்ப உபகரணம்



இணையவழி குற்றங்களை தடுக்க, திரைமறைவு இணையதள கண்காணிப்பு அமைப்புக்கான சிறப்புப் பிரிவு, 2.10 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்

சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகரங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்ட மற்றும் மாநகரங்களில், பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும்

காவலர் நலன்



நுண்ணறிவு, சிறப்பு செயலாக்கப் பிரிவில் சிறப்பான பணிக்காக, முதல்வர் பதக்கம் வழங்கப்படும்

அண்ணா பதக்கங்கள் எண்ணிக்கை, 100ல் இருந்து 150 ஆக உயர்த்தப்படும்

முதல்வரின் காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை, 3,000ல் இருந்து 4,000 ஆக உயர்த்தப்படும். மாதாந்திர பதக்க படி 400 ரூபாய் என்பது, 500 ரூபாயாக உயர்த்தப்படும்

பேறுகாலத்தில் இருக்கும் பெண் காவலர்கள், காக்கி நிற சேலை அணியும்போது, தோள்பட்டையில் அவர்களின் பதவியை குறிக்கும் பட்டை அணிய அனுமதி அளிக்கப்படும்

காவல் துறையின் செய்தி மற்றும் ஊடகத் துறையை நிர்வகிக்க, புதிதாக ஒரு எஸ்.பி., பணியிடம் உருவாக்கப்படும்

பதவி உயர்வு



10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர்கள், முதல்நிலைக் காவலர்களாகவும்,3 ஆண்டுகள் முதல்நிலை காவலர்களாக பணிபுரிந்த பின் ஏட்டாகவும், 10 ஆண்டுகள் ஏட்டாக பணிபுரிந்த பின், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்களாகவும் பணி உயர்த்தப்படுவர்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட குடியிருப்புகளில், போலீசார் குடியிருக்க வகை செய்யப்படும்

போலீஸ் தேர்வு



சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வழியாக, காவல் துறையில், 2,833 இரண்டாம் நிலைக்காவலர்கள்; சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறைக்கு, 180 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள்; தீயணைப்பு துறைக்கு, 350 தீயணைப்பாளர்கள் என, மொத்தம் 3,363 பேர் தேர்வு செய்யப்படுவர்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement