என்.எல்.சி., தேர்தலில் தொ.மு.ச., ஓட்டு சரிந்தது ஏன்? முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு: நிர்வாகிகள் கலக்கம்
நெய்வேலி என்.எல்.சி.,யில் அங்கீகரிக்கப்பட்ட 2 தொழிற்சங்கங்களை தேர்வு செய்வதற்கான ரகசிய ஓட்டெடுப்பு கடந்த 25ம் தேதி நடந்தது. ஓட்டெடுப்பில், 3,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட தொ.மு.ச., விற்கு அதன் கூட்டணிக் கட்சிகளான வி.சி.,-காங்.,-ம.தி.ம.க., மூ.தொ.ச., உள்ளிட்டவை ஆதரவு கொடுத்தன.
இருப்பினும், கடந்த 25ம் தேதி நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் பதிவான 6,364 ஓட்டுகளில் 2, 507 ஓட்டுகளை மட்டுமே தொ.மு.ச., வால் பெற முடிந்தது. 1,000த்திற்கும் மேற்பட்ட தொ.மு.ச., உறுப்பினர்கள் கூட, தொ.மு.ச.,வை ஏன் புறக்கணித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க.,வுக்கு ஆதரவாக, தேர்தலில் போட்டியிடாமல் தேர்தலை தவிர்த்த கூட்டணிக் கட்சி சங்கங்கள் யாருக்கு ஓட்டளித்தனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொ.மு.ச., நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகளால் இச்சங்கம் தேர்தலில் குறைந்த ஓட்டுகள் பெற்று தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாக சக உறுப்பினர்கள் புலம்புகின்றனர்.
இது தொடர்பாக தொ.மு.ச., வினரே தி.மு.க., தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். தொ.மு.ச.,வை வெற்றி பெற செய்ய வேண்டுமென, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதுதவிர அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்க.ள் தேர்தல் பணியாற்றியும் தொ.மு.ச.,விற்கு ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.
தொ.மு.ச.,வின் கோட்டையாக திகழும் என்.எல்.சி.,யில், தொ.மு.ச., வின் ஓட்டு சரிந்தது ஏன் என்பற்கான காரணங்களை திரட்டிய உளவுத்துறை போலீசார், முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.
தொ.மு.ச., விவகாரத்தில் முதல்வர் என்ன அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை என்.எல்.சி., தொ.மு.ச.,வினர் மட்டுமின்றி உள்ளூர் கட்சியினரும் கலக்கத்தில் உள்ளனர்.