'பொது புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும்'
சென்னை: ''ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருக்கும், 'காலனி' என்ற சொல், அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:
வி.சி., - எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் மற்றும் அவருடையை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர், அரசு பணியாளர் பதவி உயர்வில், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு கோரி, என்னிடம் கடிதம் தந்துள்ளனர்; நேரிலும் சொல்லியிருக்கின்றனர்.
அந்த அடிப்படையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
பல்லாண்டு காலமாக, தமிழக அரசு பணியாளர் தேர்வு முறையில், சமூக நீதி அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வரும் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அதற்கான சட்டரீதியான தீர்வுகள் அளிக்கவும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்.
அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரை அடிப்படையில், இந்த தீர்ப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து, ஒரு நல்ல தீர்வு காணப்படும்.
இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக, 'காலனி' என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருக்கிறது.
இனி இந்த சொல், அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.