'எஸ்கலேட்டர், லிப்ட்' அனுமதி எளிதாக்க சட்டத்திருத்தம்

சென்னை: குடியிருப்பு, வணிக கட்டடங்களில், 'லிப்ட், எஸ்கலேட்டர்' அமைப்பது, பராமரிப்பது தொடர்பான விதிகளை எளிமைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று நிறைவேறியது.

அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும்போது, 'லிப்ட், எஸ்கலேட்டர்' போன்ற வசதிகள் ஏற்படுத்த அனுமதி வழங்குவதற்காக, 1997ல் சட்டம் இயற்றப்பட்டது.

இதில், லிப்ட், எஸ்கலேட்டர்கள் பராமரிப்பு, உரிமம் பெறுவது தொடர்பான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. மேலும், இதில் குறிப்பிட்ட விதிகளை மீறும் நபர்களுக்கு, அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில், லிப்ட், எஸ்கலேட்டர் சட்ட விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை சட்டசபையில் நேற்று, அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

இதில், லிப்ட், எஸ்கலேட்டர் அமைக்க அனுமதி வழங்குவது, அனுமதி கோரி விண்ணப்பித்தல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பு ஏற்பது போன்ற நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

அனுமதி பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்படுகிறது.

குறிப்பிட்ட சில நிலைகளில் கட்டட உரிமையாளர், நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதையும் எளிதாக்க, இதில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா, நேற்று நிறைவேற்றப்பட்டது.

Advertisement