குறைந்த அளவு நீர் திறப்பதால் குடிநீர் திட்டங்கள்; செயல்படுத்துவதில் சிரமம் வைகை ஆற்றில் அதிகாரிகள் ஆய்வு

தேனி; முல்லைபெரியாற்றில் குறைந்த அளவு தண்ணீர் திறப்பதால் ஊராட்சிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் வைகை ஆற்று பகுதியில் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.முல்லைபெரியாறு, மூல வைகை ஆறுகள் இணைந்து வைகை அணைக்கு தண்ணீர் செல்கின்றன. வைகை ஆறு, வைகை அணை பகுதிகளில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் தேனி, ஆண்டிபட்டி, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது முல்லைப்பெரியாற்றில் 100 க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 50கன அடிநீர் மதுரை குடிநீர் திட்டத்திற்கு செல்கிறது.

எஞ்சிய தண்ணீர் வைகை அணைக்கு வந்தாலும் சில கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு முழுவதும் தண்ணீர் வழங்க முடிவதில்லை. இதனால் சில ஊராட்சிகளுக்கு தண்ணீர் தினமும் வழங்குவதில்லை.

இதனால் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கருத்தப்பாண்டி, உதவி செயற்பொறியாளர் இந்திரகோபால், உத்தமபாளையம் பெரியாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மயில்வாகனம், வைகை அணை உப கோட்ட உதவி செயற்பொறியாளர் முருகேசன் குன்னுார் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'ஆற்றில் இதே போன்று குறைந்த அளவு தண்ணீர் வந்தால் வரும் நாட்களில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும். இதனால் முல்லைப்பெரியாற்றில் இருந்து 130 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளோம்,' என்றனர்.

Advertisement