கேடாகும் 'பேரிகேட்'கள் 5 கார்கள் மோதி விபத்து

ஓமலுார் : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அடுத்த குதிரைக்குத்திபள்ளம் முன், தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் போலீசார் இரும்பு தடுப்பு வைத்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த, 'ஹூண்டாய்' கார், தடுப்பு அருகே திடீரென பிரேக் போட்டதால், அடுத்தடுத்து வந்த நான்கு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின.

அனைவரும் காயமின்றி தப்பினர். விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகள் கூடாது; சாலை குறுக்கே தடுப்புகள் கூடாது என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில், போலீசார் வாகனங்களின் வேகத்தை குறைக்க, சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன.

தீவட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று நடந்த விபத்துக்கும், தடுப்புகள் தான் காரணம். தடுப்புகள் வைப்பதை தடுக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement