குழந்தை உயிரிழப்பால் மதுரை பள்ளிக்கு பூட்டு

மதுரை : மதுரை கே.கே.நகரில், 'ஸ்ரீ கிண்டர் கார்டன்' பள்ளியில், கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தன.
இங்கு, மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த பேராசிரியர் அமுதன், தன் 3 வயது மகள் ஆருத்ராவை பேச்சு பயிற்சிக்காக சேர்த்தார்.
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆருத்ரா திடீரென மாயமானார். ஒருமணி நேரம் கழித்து அவரை ஆசிரியர்களும், உதவியாளர்களும் தேடினர். பள்ளி கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள, 10 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் ஆருத்ரா மூழ்கி கிடந்தார்.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; ஆனால், சிறுமி பலியானார். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறினர்.
பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமி, 48, உதவியாளர் வைரமணி கைது செய்யப்பட்டனர். ஆசிரியைகள், உதவியாளர்கள் உட்பட எட்டு பேரிடம் விசாரணை நடக்கிறது. பள்ளிக்கு, 'சீல்' வைத்து பூட்டப்பட்டது.
சி.இ.ஓ., ரேணுகா கூறியதாவது:
மாவட்டத்தில் ஏப்., 24 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி விதிமீறி செயல்பட்டுள்ளது. 60 பேர் படிக்கும் பள்ளியில், 30 பேருக்கு கோடை பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. அதற்கான வருகை பதிவேடும் வைத்துள்ளனர்.
நேற்று, 20 மாணவர்கள் வந்திருந்தனர். கோடையில் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். அவ்வப்போது தேவைக்கு ஏற்ப சிமென்ட் மூடியை திறந்து தண்ணீரை பயன்படுத்தி வந்து உள்ளனர். நேற்று காலை தண்ணீரை பயன்படுத்திவிட்டு மூடாமல் விட்டுள்ளனர். ஆருத்ரா விளையாடும் போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.