18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' ரத்து செய்ய... கடிதம்! சபாநாயகருக்கு கவர்னர் அனுப்பியதால் காங்., 'டென்ஷன்'

பெங்களூரு: பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை வாபஸ் பெறும்படி, முதல்வர் சித்தராமையா, சபாநாயகர் காதருக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதி உள்ளார். இதனால் காங்கிரசார், 'டென்ஷன்' அடைந்துள்ளனர்.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் போது, 'ஹனி டிராப்', முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்த பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் காதர் இருக்கை முன்பும், அருகிலும் நின்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்து காதர் நடவடிக்கை எடுத்தார். அதிர்ச்சி அடைந்த பா.ஜ.,வினர், உத்தரவை திரும்ப பெறும்படி கேட்டு கொண்டனர். இதை சபாநாயகர் ஏற்கவில்லை.

சபாநாயகரை பலமுறை சந்தித்து, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறும்படி, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தியும், அவர் கேட்கவில்லை.

இது தொடர்பாக, பெங்களூரு ராஜ்பவனில் நேற்று முன்தினம் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சந்தித்து புகார் கொடுத்தனர்.

அதில், '18 எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகம், அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த உத்தரவை வாபஸ் பெறும்படி அரசுக்கும், சபாநாயகருக்கும் உத்தரவிட வேண்டும்' என்று கேட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, சபாநாயகர் காதருக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பிரதான எதிர்க்கட்சியை சேர்ந்த 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீது விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

மேலே கூறியதை கருத்தில் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் ஜனநாயக அடிப்படை கொள்கைகளை நிலை நிறுத்தவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளாக தங்கள் பொறுப்புகளை மீண்டும் ஏற்க வேண்டும்.

அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, சஸ்பெண்டை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை, என் கவனத்துக்கு கொண்டு வரும்படியும் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

சபாநாயகர் இருக்கைக்கு அவமதிப்பு ஏற்படுத்திய 18 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை வாபஸ் பெறும்படி கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, சபாநாயகர் காதருக்கு கடிதம் எழுதியிருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை, மேல்சபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கவர்னர் இழுத்தடிக்கிறார்.

இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், அவர் காலதாமதம் செய்வது போன்று, முதல்வரும், சபாநாயகரும் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் மூலம் பா.ஜ.,வுக்கும் பாடம் கற்பிப்பது என, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

18 எம்.எல்.ஏ.,க்கள் யார் யார்?

பா.ஜ., தலைமை கொறடா தொட்டனகவுடா பாட்டீல், சி.என்.அஸ்வத் நாராயணா, எஸ்.ஆர்.விஸ்வநாத், பி.ஏ.பசவராஜு, எம்.ஆர்.பாட்டீல், சன்னபசப்பா, பி.சுரேஷ் கவுடா, உமாநாத் கோட்யான், ஷரனுசலாகர், சைலேந்திர பெல்தலே, சி.கே.ராமமூர்த்தி, யஷ்பால் சுவர்ணா, பி.பி.ஹரிஷ், பரத் ஷெட்டி, தீரஜ் முனிராஜு, சந்துரு லமானி, முனிரத்னா, பசவராஜ் மட்டிமட்.

Advertisement