ஆதரவாளர் தோல்வியால் சுதாகர் எம்.பி., 'கடுகடு'

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் தாலுகா வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்க தேர்தலில் தன் ஆதரவாளர் தோற்றுப் போனதால், பா.ஜ., - எம்.பி., சுதாகர் கடுப்பாகி உள்ளார்.

சிக்கபல்லாபூர் தாலுகா வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கத்திற்கு, நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் 14 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டிய இந்த தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 13 இடங்களில் வெற்றி பெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி தோல்வி அடைந்தார். சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகரின் ஆதரவாளரான இவர் வெற்றி பெற்றால், அவரை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் ஆக்கலாம் என்று சுதாகர் நினைத்திருந்தார்.

இந்நிலையில் எம்.பி., சுதாகரின் 'வாட்ஸாப் குரூப்'பிலும், கிருஷ்ணமூர்த்தியின் தோல்வி குறித்த விவாதம் நடந்தது. பா.ஜ., - ம.ஜ.த.,வினர் சதி செய்து கிருஷ்ணமூர்த்தியை தோற்கடித்து விட்டதாக சிலர் கருத்து பதிவிட்டனர். இதனால் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் மீது, சுதாகர் கடுப்பில் உள்ளார்.

கடந்த ஜனவரியில் சிக்கபல்லாபூர் மாவட்ட பா.ஜ., தலைவராக, சந்தீப் ரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுதாகர், தன்னிடம் கேட்காமல் தலைவர் நியமனம் நடந்ததாக போர்க்கொடி துாக்கினார்.

கட்சியில் இருந்து விலகுவதாகவும் மிரட்டல் விடுத்து, பா.ஜ., மாநிலத் தலைவர் விஜயேந்திரா மீது குற்றச்சாட்டு மழை பொழிந்தார். பின், அவரை மேலிட தலைவர்கள் சமாதானம் செய்தனர். தற்போது கட்சி நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுக்கியே இருக்கிறார். சுதாகர் முன்பு காங்கிரசில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement