சீனியர் டிவிஷன் கால்பந்து ஐ.சி.எப்., அணி 'சாம்பியன்'

சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடந்தது. இதில் ஐ.சி.எப்., - ஏ.ஜி.ஓ.ஆர்.சி., சென்னை சிட்டி போலீஸ் உட்பட ஒன்பது அணிகள் லீக் முறையில் போட்டியிட்டன. வெற்றிக்கு 3 புள்ளியும், டிராவுக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் பங்கேற்றன.

போட்டி முடிவில் ஐ.சி.எப்., அணி ஐந்து வெற்றி, இரண்டு டிரா என, மொத்தம் 17 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. ஐ.சி.எப்., அணி விளையாடிய கடைசி போட்டியில் ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தில், இந்தியன் வங்கி அணி ஐந்து வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என, 16 புள்ளிகளுடன் உள்ளது.

சீனியர் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய முதல் நான்கு அணியைத் தேர்வு செய்து, அவர்களுக்கான சூப்பர் லீக் போட்டியை, சென்னை கால்பந்து அமைப்பு நடத்த உள்ளதாகவும், அதற்கான தகவல்களை விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement