இந்தியா மீது பயம்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் செல்லும் விமானங்களை ரத்து செய்தது பாக்.,

இஸ்லாமாபாத்: இந்தியா ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சத்தில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் செல்லும் விமானங்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கையாக, தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளது.
இந்தியா தாக்குதல் நடத்த தயாராகி உள்ளதாக பாக்., அமைச்சர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். அடுத்த 24 மணி நேரம், 36 மணி நேரம் என சொல்லி வருகின்றனர். பாகிஸ்தானும், இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்பார்த்து கொண்டு உள்ளது.
இதனிடையே, ஆக்கிரமிப்பு காஷ்மீர் செல்லும் மற்றும் அங்கிருந்து கிளம்பும் விமானங்களை பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஸ்கார்டு என்ற இடத்திற்கு செல்லும் கராச்சி மற்றும் லாகூரில் இருந்து செல்லும் இஸ்லாமாபாத்தில் இருந்து செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதேபோல், இஸ்லாமாபாத்தில் இருந்து கில்கிட் பகுதிக்கு செல்லும் 4 விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கில்கிட் மற்றும் ஸ்கார்டு நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா தாக்குதலுக்கு தயாராகி வருவதன் காரணமாக, தனது வான்வெளி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், இது தற்காலிகமானதா அல்லது நீண்டகாலத்திற்கு தொடருமா எனக்கூற மறுத்துவிட்டனர்.
