சூப்பர் கோப்பை கால்பந்து: பைனலில் கோவா-ஜாம்ஷெட்பூர்

புவனேஸ்வர்: சூப்பர் கோப்பை கால்பந்து பைனலுக்கு கோவா, ஜாம்ஷெட்பூர் அணிகள் முன்னேறின.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், சூப்பர் கோப்பை கால்பந்து 5வது சீசன் நடக்கிறது. இதில் 'ஐ-லீக்', ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் 15 அணிகள் பங்கேற்கின்றன. முதல் அரையிறுதியில் மோகன் பகான், கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோவா அணியின் பிரிசன் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 23வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் சுஹைல் அகமது பட், ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கோவா அணிக்கு இகர் குரோட்சேனா (50வது நிமிடம், 'பெனால்டி'), போர்ஜா ஹெர்ரெரா கான்சலஸ் (58வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய மோகன் பகான் அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் கோவா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2019, 2025) பைனலுக்குள் நுழைந்தது.


மற்றொரு அரையிறுதியில் மும்பை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது. வரும் மே 3ல் நடக்கவுள்ள பைனலில் கோவா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

Advertisement