திடீர் ஓய்வு ஏன்: மவுனம் கலைத்த அஷ்வின்

புதுடில்லி: ''என் உணர்வுகளுக்கு மதிப்பு கிடைக்காததால் ஓய்வு பெற முடிவு செய்தேன்,'' என, அஷ்வின் தெரிவித்தார்.

இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 38. தமிழகத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் 'பத்ம ஸ்ரீ' விருது வென்றார். இதுவரை 106 டெஸ்ட் (537 விக்கெட்), 116 ஒருநாள் (156 விக்கெட்), 65 சர்வதேச 'டி-20' (72 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார். ஆஸ்திரேலியாவில் நடந்த 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடருக்கு தேர்வான அஷ்வினுக்கு, பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இடம் கிடைக்கவில்லை. அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்டில் விளையாடிய இவர், பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகவில்லை. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறித்து, பாதியில் நாடு திரும்பினார்.
இதுகுறித்து அஷ்வின் கூறியது: உண்மையை கூற வேண்டுமானால் எனது 100வது டெஸ்ட் போட்டியுடன் (எதிர்: இங்கிலாந்து, 2024, மார்ச் 7-9, தர்மசாலா) ஓய்வு பெற திட்டமிட்டேன். அப்போது சிறப்பாக விளையாடியதால், இன்னும் சிறிது காலம் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் மட்டும் பங்கேற்க முடிவு செய்தேன். சதம் (113), 6 விக்கெட் என 'ஆல்-ரவுண்டராக' அசத்திய சென்னை டெஸ்ட் போட்டியுடன் (எதிர்: வங்கம், 2024, செப். 19-22) விடை பெற விரும்பினேன். நன்றாக விளையாடும் போது ஓய்வு பெறுவது கடினம். சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து தொடரில் மோசமாக தோற்றதால், ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க முடிவு செய்தேன். ஏனெனில் கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருந்தேன். ஆனால் எனக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. என் உணர்வுக்கு மதிப்பு கிடைக்கவில்லை. அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. அப்போது, இது தான் சரியான நேரம் என்று ஓய்வை அறிவித்தேன். மீண்டும் போட்டியில் பங்கேற்பதற்காக நான் எடுத்த கடினமான பயிற்சிகள், உடல் உழைப்புகள் அனைத்தும் என் குடும்பத்துடன் நான் செலவிடும் நேரத்தை வீணாக்கின.
இவ்வாறு அஷ்வின் கூறினார்.

Advertisement