யு.டி.எஸ்., செயலி பயன்பாடு தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை:'ரயில்வேயின், யு.டி.எஸ்., செயலியில், முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் போது, விதிகளை பின்பற்றா விட்டால் அபராதம் விதிக்கப்படும்' என, தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

ரயில்களில் முன்பதிவில்லாமல் பயணிப்போர், டிக்கெட் கவுன்ட்டர் சென்று வரிசையில் காத்திருந்து, டிக்கெட் பெறாமல், தங்கள் மொபைல் போனில், எளிதாக டிக்கெட் எடுக்க வசதியாக, யூ.டி.எஸ்., மொபைல் செயலியை, தெற்கு ரயில்வே, 2015 ஏப்ரலில் அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலி, தற்போது நாடு முழுதும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயலி வாயிலாக, முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் போன்றவற்றை பெற முடியும். இந்த செயலியில், விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என, ரயில்வே எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

யூ.டி.எஸ்., செயலி பயன்படுத்தி, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் வரை, 2.47 கோடி பேர், மொபைல் போன் வாயிலாக, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுத்து பயணம் செய்துள்ளனர்.

இதன் பயன்பாடு ஆண்டுதோறும், 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த செயலியில், இரண்டு வகையாக, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கலாம். காகிதம் இல்லாமல் டிஜிட்டலில் டிக்கெட் எடுப்பது அல்லது காகிதம் வடிவில் டிக்கெட் எடுத்து பயணிப்பது.

பயணியர் சிலர் காகித வடிவில் டிக்கெட் எடுக்கும், 'ஆப்சனை' தேர்வு செய்து விட்டு, காகித டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கின்றனர். சிலர் டிக்கெட் எடுத்து, வேறொரு மொபைல் போனில் காண்பிக்கின்றனர். அவ்வாறு செய்யக்கூடாது. செயலியில் இருக்கும் விதிகளை பின்பற்றாவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement