3 கோவில்களில் நேற்று மஹா கும்பாபிஷேகம்; திருக்கல்யாணத்துக்கு பின் சுவாமி திருவீதி உலா

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சோற்றுத்துறை நாதர் கோவில், பெரியகளந்தை ஆதீஸ்வரர் கோவில் மற்றும் கரிவரதராஜ பெருமாள் கோவில்களில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.

நெகமம், பெரியகளந்தை, பெரியநாயகி உடனமர் ஆதீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண கரிவரத ராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 26ம் தேதி, காலை நவகிரக ஹோமம், மகா சுதர்சன யாகம், லட்சுமி ஹோமம், தனபூஜை, மஹா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது.

27ம் தேதி, கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. 28ம் தேதி, பிரசன்னாபிஷேகம், யாக சாலை அலங்காரம், முதற் கால வேள்வி நடந்தது. 29 தேதி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, மூலமூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.

நேற்று, நான்காம் கால கேள்வி, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகாலயத்திலிருந்து கலசங்கள் எழுந்தருளும் நிகழ்வு, மூலாலய விமான கலசங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதன்பின், பெரியநாயகி உடனமர் ஆதிஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண கரிவரதராஜ பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு மஹாஅபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடந்தது.

* கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் அன்னபூரணி அம்மை உடனமர் திருச்சோற்றுத்துறை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா, 28ம் தேதியன்று திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடுடன் துவங்கியது. தொடர்ந்து வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது.

29ம் தேதி, ஐங்கரன் வேள்வி வழிபாடு, மண்ணெடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் முதற்கால வேள்வி நடந்தது. நேற்று, திருப்பள்ளியெழுச்சி, சுற்று பூஜைகள், இரண்டாம் கால வேள்வி, திருக்கலசப் புறப்பாடு, விமானம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதில், கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதி மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், சுவாமி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடந்தது.

Advertisement