நிதி ஒதுக்கியும் கட்டப்படாத 273 அங்கன்வாடிகள் தணிக்கை அறிக்கையில் புகார்

சென்னை:'தமிழகத்தில் 2019 - 23ம் ஆண்டுகளில் நிதி பெற்று, 273 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் கட்டாமல் விடப்பட்டுள்ளன' என, இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஐ.சி.டி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கான சுகாதாரம், ஊட்டச்சத்து, முன் பருவக்கல்வி என்ற அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுதும், 54,439 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

ரூ.12 லட்சம்



கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கான கட்டடங்கள் கட்டும் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான பணிகள், முறையாக முடிக்கப்படாமல் இருப்பது, தணிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட, 12 லட்சம் ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டது. கடந்த 2019 - 23ம் ஆண்டுகளில், மொத்தம் 3,503 அங்கன்வாடி மையங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டதில் இருந்து, 11 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும். இந்த அவகாசம் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை.

குறிப்பாக, 2019 - 20ம் நிதியாண்டில், 1,303 கட்டடங்கள் கட்ட, 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் முடியாமல், அடுத்த நிதி ஆண்டு கணக்கில் புதிதாக கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், 3,503 கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டதில், 273 கட்டடங்கள் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

கேரம் போர்டு



தமிழகத்தில் 77 அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்ததில், மத்திய அரசின் பாலர் கல்வி உபகரணங்கள் தேர்வு பட்டியலில் இல்லாத, 'கேரம் போர்டு' வாங்கப்பட்டுள்ளது. வழிகாட்டி பட்டியலில் இல்லாமல், 3.81 கோடி ரூபாய் செலவில் கேரம் போர்டுகள் வாங்கப்பட்டுள்ளன.

இதை பயன்படுத்தும் வழிமுறைகள் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. மேலும், சிறிய அளவிலான கேரம் போர்டு காய்களை, குழந்தைகள் விழுங்கி விடுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதால், அவற்றை பயன்படுத்தவில்லை.

வழிகாட்டி பட்டியலில் இல்லாத பொருளை வாங்கியதால், 3.81 கோடி ரூபாய் பயனற்ற செலவினமாக கருதப்படுகிறது.

ஐ.சி.டி.எஸ்., திட்ட இயக்குநர் அளித்த பதிலில், 3 முதல், 6 வயது வரையிலான குழந்தைகள், பணியாளர்களின் கண்காணிப்பில் கேரம் போர்டு விளையாட அறிவுறுத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில் தணிக்கை துறைக்கு ஏற்புடையதாக இல்லை. குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, வருங்காலங்களில் இது போன்ற பொருட்களின் கொள்முதல் தவிர்க்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement