தங்கவயலில் குடிநீர் தட்டுப்பாடு ஜீவ நாடியான டேங்கர் லாரிகள்

தங்கவயல்: கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கவயலில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால், நகர மக்கள் டேங்கர் தண்ணீரை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பேத்தமங்களா நீர்த்தேகத்தில் இருந்து தங்கவயலுக்கு 13 கி.மீ., துாரத்துக்கு குடிநீர் குழாய் அமைத்து, தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

பேத்தமங்களாவில் தினமும் ஒன்பது மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க முடியும். பழைய சுத்திகரிப்பு நிலையமாக இருப்பதால், 4 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.

அதேவேளையில், இங்கு குறைந்த திறன் கொண்ட மோட்டார்கள் உள்ளதால், நகருக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெலில் கிடைக்கும் உப்பு நீரையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.

முன்னர், நகருக்கு 3.5 மில்லியன் லிட்டர் முதல் 4 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, 20 மில்லியன் லிட்டர் தேவைப்படுகிறது.

இதனால், டேங்கர் தண்ணீர், தங்கவயல் மக்களின் உயிர் நாடியாக மாறிவிட்டது. மக்களின் தண்ணீர் தாகத்தை தணிக்க தங்கவயலின் 35 வார்டுகளில், தினமும் 200க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஒரு டேங்கர் தண்ணீர், 650 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரையிலும்; மூன்று குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள் தண்ணீருக்கு திண்டாட வேண்டியுள்ளது.

நாகவாரா, எரகோள் திட்டம், லட்சுமி சாகர் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் இன்னும் துவங்கவில்லை. இந்த சூழலில், புதிய தொழிற்சாலைகள், டவுன்ஷிப்புகள் ஏற்படுத்தினால் அவற்றுக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கும் என்ற கேள்விக்கு, மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசு அதிகாரிகளிடம் எந்த பதிலும் இல்லை.

காவிரி நீர் கிடைக்கும்!

தங்கவயலில் டவுன்ஷிப் உருவாக வேண்டுமானால், அடிப்படை தேவையான தண்ணீர் கொண்டு வரப்படும். காவிரி நீர் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படும். கே.சி.வேலி நீர் திட்டமும் தங்கவயலுக்கு கிடைக்கும். அது, 1,000 ஏக்கர் பரப்பளவுள்ள ராம்சாகர் ஏரியில் நிரப்பப்படும். சிறிய நீர் பாசனத்துறை மூலம் வினியோகிக்கப்படும்.

- ரூபகலா, எம்.எல்.ஏ., தங்கவயல் தொகுதி.

டேங்கர்களுக்கு கட்டுப்பாடு

அரசு உத்தரவுப்படி நகராட்சி பகுதியில் அனைத்து தண்ணீர் வினியோகம் செய்யும் டேங்கர்களின் உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் விபரம் ஆகியவற்றை நகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் தண்ணீர் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். தரமற்ற தண்ணீர் குறித்து புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

-பவன் குமார்,நகராட்சி ஆணையர், தங்கவயல்.

Advertisement