மாநகராட்சி தலைமை கமிஷனர் பொறுப்பேற்ற மஹேஸ்வர ராவ் 

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையராக மஹேஸ்வர ராவ் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.

பெங்களூரு மாநகராட்சியின் தலைமை கமிஷனராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துஷார் கிரிநாத்.

இவர் கடந்த 28ம் தேதி, கமிஷனர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, கர்நாடக நகர வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலராகவும், மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

இவரால், காலியான மாநகராட்சி கமிஷனர் பதவிக்கு, பெங்களூரு மெட்ரோ நிறுவன இயக்குனர் மஹேஸ்வர ராவ் அன்றைய தினமே கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாநகராட்சி தலைமையகத்தில் இருவரும் தங்கள் புதிய பொறுப்பை ஏற்று கொண்டனர். அப்போது, கர்நாடக நகர வளர்ச்சி துறையின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் உமா சங்கர், துஷார் கிரிநாத்துக்கு சாவியை வழங்கி கவுரவித்தார். அதே போல, துஷார் கிரிநாத் செங்கோலை மஹேஸ்வர ராவிடம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த பதவி மாற்றத்தால், பெங்களூரு மெட்ரோ ரயில், பெங்களூரு மாநகராட்சி என்ற மிகப்பெரிய 2 நிர்வாகங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மஹேஸ்வர ராவிற்கு கிடைத்து உள்ளது.

Advertisement