விளைச்சல், விலை இல்லாமல் தர்ப்பூசணி விவசாயிகள் கவலை வருவாய் இழப்பால் நிவாரணம் எதிர்பார்ப்பு

பொன்னேரி:மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், கோடைக்கால பயிரான தர்ப்பூசணி பயிரிட்ட விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் மற்றும் விலை இல்லாத நிலையில், வருவாய் இழப்பை எண்ணி கவலை அடைந்து வருகின்றனர். அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வைரவன்குப்பம், நெடுவரம்பாக்கம், சின்னகாவணம், கிருஷ்ணாபுரம், தேவராஞ்சேரி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், சம்பா நெல் அறுவடைக்கு பின், தர்ப்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.

இந்த ஆண்டு மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், 2,000 ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டன. இதற்காக, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விதைகள் முளைத்து செடிகள் வளர துவங்கியபோது களை எடுப்பது, மருந்து தெளிப்பது, சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சுவது என, கடின உழைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டரை மாத பயிர்காலம் முடியும் நிலையில், தற்போது செடிகளில் தர்ப்பூசணி காய்கள் வளர்ந்துள்ளன. அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், அவை எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் 16ம் தேதி பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 10 செ.மீ., மழை பெய்தது. தர்ப்பூசணி பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களில் தண்ணீர் தேங்கின. மூன்று நாட்களுக்கு பின், தண்ணீர் வடிந்ததால் தர்பூசணி செடிகள் பாதிப்பிற்கு உள்ளாகின.

தர்ப்பூசணி பழங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை அடையாமல் போயின. பிஞ்சு தர்ப்பூசணி காய்கள் தண்ணீரில் அழுகின. தீடீர் மழையால், பழங்களின் வளர்ச்சி பாதித்தன. வழக்கமாக அறுவடை காலங்களில், ஒரு தர்ப்பூசணி, 10 -12 கிலோ வரை எடை இருக்கும்.

தற்போது, 5 - 6 கிலோ எடையே உள்ளது. இவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், பொதுமக்கள் இடையே தர்ப்பூசணிக்கு வரவேற்பு குறைந்துவிட்டதாக கூறி, மொத்த வியாபாரிகள் அவற்றை வாங்க முன்வரவில்லை. அப்படியே வாங்க வருவோரும், குறைந்த விலைக்கு கேட்பதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் கூறியதாவது:

வழக்கமாக, ஒரு ஏக்கரில், 10,000 - 13,000 கிலோ தர்ப்பூசணி கிடைக்கும். இந்த ஆண்டு எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. ஒரு ஏக்கருக்கு, 4,000 - 5,000 கிலோ வரை தான் கிடைக்கிறது.

மேலும், சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். 1,000 கிலோ தர்ப்பூசணி, அவற்றின் அளவிற்கு ஏற்ப, 4,500 - 6,500 ரூபாய்க்கு விற்கிறோம். இது செலவிட்ட தொகையை விட குறைவான வருவாயை தருகிறது.

இந்த ஆண்டு தர்ப்பூசணி பயிரிட்டவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பே ஏற்பட்டுள்ளது. இழப்பீடு கேட்டு, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மழையால் தர்ப்பூசணி விவசாயம் பாதித்திருப்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க உள்ளோம்.

மேலும், நன்கு வளர்ந்த தர்ப்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் தவித்த விவசாயிகளுக்கு, மொத்த வியாபாரிகள், 14 பேரை அறிமுகப்படுத்தி உள்ளோம். தர்ப்பூசணியை வாங்குவதற்கு வழிவகை செய்துள்ளோம்.

தர்ப்பூசணி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தர்ப்பூசணியை அனைவரும் வாங்கி உண்ணலாம்.

- தோட்டக்கலை துறை அலுவலர்,

பொன்னேரி.

Advertisement