ரூ.240ல் இருந்து ரூ.9002 ஆக உயர்ந்த நகராட்சி சொத்துவரி

துாத்துக்குடி:பல மடங்கு உயர்த்திய சொத்து வரியை குறைக்காவிட்டால், தற்கொலை செய்யப்போவதாக முதியவர் ஒருவர், மிரட்டல் விடுத்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் நகராட்சி கரம்பாவிளை பகுதியை சேர்ந்தவர் பலவேசமுத்து, 65. இவரது வீட்டிற்கு, கடந்த 2021- - 22 நிதியாண்டில் 230 ரூபாயாக இருந்த சொத்து வரி அடுத்த ஆண்டு 8,740 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள், பலவேசமுத்து வீட்டிற்கு சென்று அந்த தொகையை வசூலித்துள்ளனர். தொடர்ந்து 2024- - 25ல் 9002 ரூபாயாக சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பலவேசமுத்து கட்டாமல் இருந்துள்ளார். அவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும், அபராதத்துடன் சேர்ந்து 20,094 ரூபாய் செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வரி செலுத்த தவறினால், 1998ல் கொண்டு வரப்பட்ட நகர்புற உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, சொத்து பறிமுதல் செய்யப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த பலவேசமுத்து, வரி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மனைவியை இழந்ததால், வீட்டில் நான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன். 3 ஆண்டுகளுக்கு முன் 240 ரூபாய் சொத்துவரி செலுத்திய எனக்கு தற்போது 9,002 ரூபாயாக உயர்த்தி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வளவு தொகை செலுத்தும் அளவுக்கு என்னிடம் வருமானம் இல்லை. தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரச்னையை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலர் பிரித்திவிராஜ் கூறியதாவது:
பலவேசமுத்துக்கு மட்டுமல்ல, திருச்செந்துார் நகராட்சியில் பெரும்பாலானோருக்கு சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனு அளித்தாலும் உரிய பதில் கிடைப்பது இல்லை. முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.