சடலத்தை இலவசமாக எரியூட்ட மல்லுார் டவுன் பஞ்.,ல் ஏற்பாடு



பனமரத்துப்பட்டி::சடலத்தை இலவசமாக எரியூட்ட மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் மல்லுார் டவுன் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. தலைவி லதா தலைமை வகித்தார். அதில் டவுன் பஞ்சாயத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.38 கோடி ரூபாயில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அதை, கைக்குத்தல் குப்புசாமி நினைவு அறக்கட்டளை மூலம், 3 ஆண்டுகள் இயக்குதல் மற்றும் பராமரிக்க, டவுன் பஞ்சாயத்து இயக்குனர் அனுமதி அளித்துள்ளார். அதனால் அறக்கட்டளை வசம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து துணைத்தலைவர் அய்யனார் கூறியதாவது:


மறைந்த என் தந்தை குப்புசாமி நினைவாக அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மல்லுார் மக்கள், சடலத்தை இலவசமாக தகனம் செய்யலாம். டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள், அறக்கட்டளை மூலம் இலவச அமரர் ஊர்தியில் சடலத்தை எரிவாயு தகன மேடைக்கு எடுத்துச்செல்லலாம். வண்டி வாடகை செலுத்த தேவையில்லை.
சடலத்தை எரியூட்ட டவுன் பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை, அறக்கட்டளையே செலுத்திவிடும். முதல்வர் ஸ்டாலின், விரைவில் எரிவாயு தகன மேடையை திறந்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement