விமானத்தில் வந்த லக்கேஜ் காணோம்: 'இண்டிகோ' மீது தி.மு.க., - எம்.பி., புகார்

16

சென்னை: 'டில்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்த நான் பல மணி நேரம் காத்திருந்தும், உடமைகள் வந்து சேரவில்லை. இண்டிகோ விமான நிறுவனம், என் உடைமைகளை கவனக்குறைவாக கையாண்டுள்ளது' என, தி.மு.க., - எம்.பி., வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவரது சமூக வலைத்தள பதிவு:



டில்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட இண்டிகோ நிறுவனத்தில் பதிவு செய்திருந்தேன். 'டி- 3 முனையத்தில் விமானம் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.விமானம் சென்னை வந்து தரையிறங்கியதும், என் உடைமைகளை பெற காத்திருந்தேன்.


ஆனால், கன்வேயர் 'பெல்ட்டில்' உடமைகள் வராததால், மொபைல் போன் செயலி வாயிலாக தேடியபோது, உடைமைகள் டில்லி விமான நிலையத்தில் இருப்பதாக காண்பித்தது. இது வழக்கத்துக்கு மாறானது.


இதையடுத்து, டில்லி விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.வேறு வழியின்றி, சென்னை விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன். அதன் பிறகும் என் உடைமைகள் வந்து சேராது என்பது, பின் தெரிந்தது.


மருந்து, வீட்டு சாவி போன்ற அவசியமான பொருட்கள், லக்கேஜ்ஜில் வைத்திருக்கும் பயணியருக்கு, இதுபோன்ற நிலை ஏற்பட்டால் என்னாகும் ?


இண்டிகோ விமான நிறுவனத்தின் அலட்சியமான சேவை வேதனை அளிக்கிறது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இது போன்ற சம்பவங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது, முற்றிலும் பயணியரை புறக்கணிக்கும் செயல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதற்கு பதில் அளித்துள்ள இண்டிகோ நிறுவனம், 'உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்துக்கு வருந்துகிறோம். உங்களை தொடர்பு கொள்ள நேரம் கொடுங்கள்' என, பதில் அளித்துள்ளது. ஆனால், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement