காரமடை நகராட்சிக்கு தபால் அனுப்பும் போராட்டம்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை நகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட கோடதாசனூர் மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, காரமடை நகராட்சி நிர்வாகத்திற்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது-

கோடதாசனூரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்பு கட்டிய சிறிய அளவிலான குடிநீர் மேல்நிலை தொட்டி தான் உள்ளது. இதனால் தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. அதே போல் சாக்கடை வசதி, தெரு விளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே சரியாக இல்லை.

இப்பகுதி நகராட்சி கவுன்சிலர் எங்கள் பகுதிக்கு வந்தே பல மாதங்கள் ஆகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் பலனில்லை. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்திற்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டோம். விரைவில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அறவழி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.---

Advertisement