அட்சய திருதியையில் தங்கத்துடன், பத்திரப்பதிவும் மும்முரம்

அட்சய திரிதியை நாளான நேற்று தங்கத்துடன் வீடு, மனைகள் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.
அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகை கடைகள் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அட்சயம் என்றால் எப்போதும் குறையாது என்று பொருள். அந்நாளில் துவங்கும் காரியங்கள் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் வாங்குவதோடு, வீடு, மனை வாங்கவும், உகந்த நாளாக கருதப்படுகிறது.
பெ.நா.பாளையம்
நேற்று அட்சய திருதியை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழக்கத்தை விட, கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. வழக்கமாக இங்கு பணியில் உள்ள இரண்டு பத்திர பதிவு அலுவலர்களுக்கு தலா, 100 பத்திரம் வீதம் பதிவு செய்ய டோக்கன் அளிக்கப்படும். அதாவது நாளொன்றுக்கு, 200 பத்திரங்கள் பதிவு செய்யப்படும். நேற்று அட்சய திருதியை தினம் என்பதால் பதிவு அலுவலர்களுக்கு தலா, 50 டோக்கன்கள் கூடுதலாக வழங்கப்பட்டு, மொத்தம், 300 பத்திரங்கள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால், நேற்று காலை முதல் பத்திரம் பதிவு செய்ய, திரளானோர் பெரியநாயக்கன்பாளையம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு திரண்டனர்.
தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு நேற்று அதிகரித்து காணப்பட்டதால், நேற்று காலை ஒரு மணி நேரமும், மாலை அரை மணி நேரமும் சர்வர் பழுதாகி, பத்திரம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மாலை,5:30 மணி வரை பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், 200 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
அன்னூர்
அட்சய திருதியை முன்னிட்டு, நேற்று அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், கூட்டம் அலைமோதியது. பத்திரப்பதிவு செய்வதற்கு 198 பேர் முன்பதிவு செய்து டோக்கன் பெற்று இருந்தனர். இதில் 163 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில், 'வழக்கமாக முகூர்த்த நாள் அன்று அதிகபட்சமாக 110 கிரய பத்திரங்கள் மட்டுமே பதிவாகும். அட்சய திருதியை நாளான நேற்று 163 பத்திரங்கள் பதிவானது. பலரும் நிலம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்,' என்றனர்.
சூலூர்
சூலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ், மயிலம் பட்டி, அரசூர், நீலம்பூர், அப்பநாயக்கன்பட்டி, உள்ளிட்ட, 21 கிராமங்கள் உள்ளன.
சூலூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் சார்பில், நேற்று 300 டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. மாலை, 5:00 மணி வரை, 200 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பலர் பத்திரம் பதிவு செய்ய காத்திருந்தனர். மேலும், 50 பத்திரங்கள் பதிவாகும், என, அதிகாரிகள் கூறினர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் ராமமூர்த்தி தலைமையிலான ஊழியர்கள் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களுக்கு தாமதம் இன்றி, பத்திரங்களை பதிவு செய்து கொடுத்தனர். 200 டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் சுமார் 150 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து சார்பதிவாளர் ராமமூர்த்தி கூறுகையில், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடுயின்றி, பொதுமக்கள் பத்திரங்களை எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் நேரடியாக என்னை அணுகலாம்.
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். தகுந்த ஆவணங்களுடன் வந்து பத்திரங்களை பதிவு செய்து, உடனடியாக பத்திரங்களை பெற்றுச் செல்லலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அட்சய திருதியை நாளில் பத்திரப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது, என்றார்.---
--நமது நிருபர்-
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு
-
உயர் ரத்த அழுத்தம் குறைய