மலை பாதையில் நிலச்சரிவு அபாய பகுதிகளில்... இயற்கை வளம் அழிப்பு! 'கட்டட' காடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்

நீலகிரி மாவட்டத்தில், வனங்கள் சூழ்ந்த குன்னுார் மலை பகுதிகளில் சமீப காலமாக இயற்கை வளங்களை அழித்து, பிரம்மாண்ட கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. 'மாஸ்டர் பிளான்' சட்டத்தில், மலை பகுதிகளில், 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடம் கட்ட கூடாது; 1500 சதுர அடிக்குள் கட்ட உள்ளாட்சி அனுமதி வழங்குவது,' உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், இத்தகைய விதிமுறைகளை மீறி, நிலச்சரிவு அபாய பகுதிகளில் தனியார் நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் அனுமதி ஆளும் கட்சியினரின் ஆதரவால் பெறப்படுகிறது.
அதன்படி, 'ஊராட்சி பகுதிகளில், 5 ஏக்கர் நிலப்பரப்பு வரையில் அமையும் மனைப்பிரிவுகளுக்கும், மாவட்ட கலெக்டர் ஆய்வறிக்கை அடிப்படையிலும், 'டிரிபிள்-ஏ' கமிட்டியின் ஒப்புதல் பெற்று, கோவை மண்டல அளவில் ஒப்புதலிலும் அனுமதி பெறப்படுகிறது.
இந்த வரம்பிற்கு மேல் உள்ள நில பயன் மாற்றம்,சென்னை 'ஹாக்கா' கமிட்டியிடம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பெறப்படுகிறது. இதனால், வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பணம் படைத்தவர்கள் பலர், நீலகிரியின் இயற்கை வளங்களை அழித்து 'கட்டட காடுகளாக' மாற்றுவது அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் நீலகிரியில் சாதாரண, நடுத்தர மக்கள் வீடுகள் கட்ட முடியாமல் அனுமதிக்காக ஆயிரக்கணக்கானோர் காத்து கிடக்கும் சூழல் உள்ளது. மாவட்டத்தில், 283 இடங்கள் நிலச்சரிவுபட்டியலில் இருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல், கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது.
நிலச்சரிவு இடத்தில் கட்டுமானம்
அதில், குன்னுாரில், 87 இடங்கள் நிலச்சரிவு அபாய பகுதிகள் என அறிவித்தும் அந்த இடங்களிலேயே கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. 1979 நவ., 19ல், சேலாஸ் பகுதியில் ஒரு கி.மீ., நீளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள், உயிர் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த பகுதிகளில், விதிமுறைகளை மீறி தற்போது சொகுசு பங்களாக்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுமதியின்றி விடுதிகளும் செயல்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இயற்கை வளங்கள் அழிப்பு
கடந்த, 2023ம் ஆண்டில்குரும்பாடி புதுக்காடு மேற்பகுதியில், பொக்லைன் பயன்படுத்தி மலையை குடைந்து, மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாலைகள் அமைத்து கட்டுமான பணிகளுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மரப்பாலம்பகுதியில் தனியார் சார்பில்ஏராளமான பலா மரங்கள்வெட்டி கடத்தப்படுகிறது. பணம் படைத்தவர்களுக்கு, மாவட்ட நிர்வாகமும் மரம் வெட்ட அனுமதி வழங்கியதால், அதனை வைத்து அவ்வப்போது மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. அப்பகுதிகளில் யானை வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவதால்யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. யானை- மனித மோதல் அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்விஜய்கிருஷ்ணராஜ் கூறுகையில், ''நீலகிரியில், பலா, நகா, விக்கி, ஊசி, கொய்யா, ஆரஞ்ச், 5 வகைபேரி உள்ளிட்ட மரங்கள், 80 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டது. காடுகள் அருகே மேய்ச்சல் நிலங்கள் இருந்ததால் வனவிலங்குகள் வராமல் இருந்தது.
மேய்ச்சல் நிலம் அழிக்கப்பட்டு, விவசாய நிலம் மற்றும் கட்டுமானம் அதிகரித்தது. இதனால், யானை, கரடி உள்ளிட்டவை, உணவுக்காக குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக் கிறது. 1990ல், மலைபாதையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் தனியார் நிலங்களிலும், கட்டுமானங்கள் மற்றும் காட்டேஜ்கள் நடத்த முழு தடை விதித்தால் மட்டுமேமலை பாதையை காப்பாற்ற முடியும். நிலச்சரிவுஏற்படாமல் இருக்க, அனைத்து மர வகைகளும் நடவு செய்யும் திட்டங்கள்கொண்டுவர வேண்டும்,'' என்றார்.
குன்னுார் ஆர்.டி.ஓ., சங்கீதா கூறுகையில், ''மலைப்பாதையில், உள்ள வனப்பகுதிகள் அருகே உள்ள தனியார் இடங்களில் விதிமீறி மரங்கள் வெட்டுவது, இயற்கை அழிப்பது தொடர்பாக மாவட்ட வன அலுவலரிடம் புகார் தெரிவிப்பதன் பேரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் புகார் அளிக்க வேண்டும்,'' என்றார்.வருவாய் துறையினர் கூறுகையில், 'மலைபாதையில், யானைகள் வழித்தடம், வாழ்விடம் கொண்ட பகுதிகள் என கூறி, வனத்துறையினர் அனுமதி மறுத்தால், அந்த இடத்தில் கட்டுமானங்களுக்கு தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், குன்னுார் நகர பகுதிக்கு யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வந்து மனித--விலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்கலாம்,' என்றனர்.
மேலும்
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு