லைசன்ஸ் இல்லாமல் பைக்கில் பறக்கும் சிறுவர்கள்

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் லைசன்ஸ் இல்லாத சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளதால், வாக்கிங் செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சமீபகாலமாக, லாஸ்பேட்டை மைதானம் மற்றும் சுற்றியுள்ள சாலைகளில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், மாணவர்கள் லைசன்ஸ் இல்லாமல் பைக்குகளில் அசுர வேகத்தில் பறக்கின்றனர். சிறுவர்கள் ஓட்டும் பைக்குகளின் பின்னால் பெற்றோரும் உட்கார்ந்து கொண்டு விபரீதம் புரியாமல் 'ஜாலி ரைடு' செல்கின்றனர்.

லைசன்ஸ் இல்லாமல் தங்களது பிள்ளைகள் பைக் ஓட்டுவதை பெற்றோர் ரசிக்கின்றனர். லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணராமல் உள்ளனர்.

மோட்டார் வாகன விதிமுறையின்படி பைக் ஓட்ட வேண்டுமெனில் , 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், லைசன்ஸ் இல்லாமல் சிறார்கள் வாகனம் ஓட்டும் விவகாரம் சீரியசாக கவனிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு சட்டப்பிரிவு 199(ஏ)-ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு. 'தங்களுக்கு ஏதும் தெரியாது;சின்ன பையன் தெரியாமல் செஞ்சுட்டான்' என்று எல்லாம் கூறி தப்பித்துவிட முடியாது.

லைசன்ஸ் இல்லாத சிறுவனுக்கு பைக் கொடுத்ததற்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர், வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், சிறார்கள் விபத்து ஏற்படுத்திய பைக்கின் வாகன பதிவும் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டு விடும். புதிதாக தான் வாகன பதிவு செய்ய வேண்டி இருக்கும்.

அதேபோல் வாகனத்தை ஓட்டிய சிறார்கள் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்கு தான் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஜாலியாக பைக் வாங்கி கொடுத்து, பின்னால் உட்கார்ந்து செல்லும் பெற்றோர்களுக்கு, விபத்து நடந்து விட்டால் விபரீதம் புரியும். வழக்கு, வாய்தா, ஒவ்வொரு மாதமும் கோர்ட் என்று அலையும்போது பெற்றோருக்கு, 'ஏன்டா இந்த பைக்கை பிள்ளைகளுக்கு ஓட்ட கொடுத்தோம்' என தங்களை தாங்களே நொந்து கொள்ள வேண்டி இருக்கும்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவர்களுக்கு சம்மன் உள்ளிட்ட கோர்ட் நடைமுறைகள் அனைத்தும் புதுசாக இருக்கும். அவர்களிடம் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். படிக்கும் வயதில் சிந்தனையை திசை திருப்பிவிடும்.

எனவே, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், லைசன்ஸ் இல்லாத தங்கள் குழந்தைகளிடம் பைக் கொடுத்து, அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளிவிட வேண்டாம்.

லாஸ்பேட்டை மீது கவனம் தேவை

லாஸ்பேட்டை மைதானத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்கிங் செல்கின்றனர். பைக் ஓட்டும் சிறுவர்கள் வாக்கிங் செல்பவர்கள் மீது மோதுவதுபோல தாறுமாறாக செல்லுகின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார், போக்குவரத்து துறையினர் இப்பகுதியில் ரோந்து வந்து, சிறுவர்கள் ஓட்டும் பைக்குகளை பறிமுதல் செய்து, பைக் கொடுத்த அவர்களது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நடையாய் நடக்க வேண்டும்

பொதுவாக லைசன்ஸ் இல்லாமல் சிறார்கள் பைக் ஓட்டினால், பெரிய விபத்து அல்லது சிறிய விபத்து என்றெல்லாம் பார்ப்பதில்லை. விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால் சிறாரை கைது செய்து அபராதமும், தண்டனையும் விதிக்கப்படலாம். தேவைப்பட்டால் பைக்கை பறிமுதல் செய்யலாம். இது, விபத்தின் தன்மை பொருத்தே உள்ளது. இதுபோன்ற விபத்து வழக்கில் எல்லா நடைமுறைகளையும் கோர்ட்டில் தான் பெற்றோர் சந்திக்க வேண்டி இருக்கும். அபராத பணத்தையும் கோர்ட்டிற்கு சென்று தான் கட்ட வேண்டும்.

Advertisement