லாகூரில் சித்து போட்டியிட்டால் வெற்றி :  அசோக் கிண்டல்

பெங்களூரு: ''பாகிஸ்தானின் ஹீரோவாக உள்ள சித்தராமையா, லாகூரில் போட்டியிட்டால் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெறுவார்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கிண்டல் செய்து உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கூறியதன் மூலம், அந்த நாட்டின் ஹீரோவாக, முதல்வர் சித்தராமையா மாறிவிட்டார். லாகூருக்கு சென்று தேர்தலில் போட்டியிட்டால், 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெறுவார். எதிர்காலத்தில் அவருக்கு பாகிஸ்தானின் சிவில் விருதும் கிடைக்ககூடும்.

அமைதிக்கான துாதர் என்று தன்னை சொல்லும் சித்தராமையா, போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்தது ஏன். மேடையில் வைத்து கலெக்டரை அவமதிப்பது; போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்வது தான் உங்கள் நாகரிகமா? நீண்ட காலம் அவர் முதல்வராக இருக்க மாட்டார். நவம்பரில் பதவி பறிபோய் விடும் என்ற பயத்தில், என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை.

முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் கருப்பு கொடி காட்டியதால், பா.ஜ.,வின் போராட்டம், கூட்டங்களுக்கு அனுமதி தர முடியாது என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறுகிறார்.

அப்படி என்றால், முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு கருப்பு கொடி காட்டிய சித்தராமையாவை, காங்கிரசில் இருந்து நீக்க சிவகுமாருக்கு தைரியம் உள்ளதா.

உங்கள் கட்சியின் உச்ச தலைவருக்கு, கருப்பு கொடி காட்டியவருக்கு இரண்டு முறை முதல்வர் பதவி வழங்கி உள்ளீர்கள். எங்களை அச்சுறுத்த உங்களுக்கு என்ன உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement