வலுக்கட்டாய கடன் வசூல் தடுப்பு சட்டம்: வழக்கறிஞர்கள் கருத்து

சட்டசபையில், கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை பிணையில் வர முடியாத சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துகள்:

கட்டப்பஞ்சாயத்து இனி இருக்காது



முருகேசன்: கடன் வழங்கும் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர் இடையே சட்டரீதியாக பாதுகாப்பு அவசியம். நிதி நிறுவனங்களுக்கு அதன் முதலீடு முக்கியம்; கடன் பெற்ற வாடிக்கையாளர் களுக்கு அவர்கள் சொத்துகளும், கவுரவமும் முக்கியம். இந்த சட்டம், இரு தரப்பையும் சமன் படுத்தியும், நீதியை நிலைநாட்டும் வகையிலும் இருக்கும். சட்டம் தவறான வகையில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழ வாய்ப்பில்லை. கட்டாயப்படுத்துதல், மிரட்டுதல் மற்றும் அத்துமீறல் என்று புகார் தெரிவித்தாலும் அதற்கான ஆதாரம், சாட்சியம் தேவைப்படும். கடன் விவகாரத்தில் உள்ளூர் பிரமுகர்கள் பஞ்சாயத்து செய்தல், அரசியல்வாதிகள் தலையீடு, போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்து, அடாவடி ஆட்கள் தலையீடு போன்றவற்றுக்கும் தீர்வு ஏற்படும்.

கடன் வழங்குவதில்தயக்கம் ஏற்படும்



மாணிக்கராஜ்: புதிய சட்டத்தில், கடன் வழங்கிய நிறுவனங்கள், அலுவலர்கள் மீது கடன் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் தேவையற்ற புகார்களை பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. பல்வேறு சட்டங்கள் மக்கள் நலனுக்காக போடப்பட்டாலும் அதை சிலர் தங்கள் தேவைக்காக மிரட்டலுக்குப் பயன்படுத்தவும் முயற்சி செய்வர். நிதி நிறுவனங்கள் கடன் வழங்க தயக்கம் காட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. கடன் தவணையை வசூலிக்கச் சென்றால் கூட மிரட்டல் புகார் தரலாம். குறிப்பிட்ட சில கடன்கள் 'சிபில்' அறிக்கையில் எதிரொலிக்காது. இது போல் புகாருக்கு உட்படும் கடன்கள் 'சிபில்' அறிக்கையைப் பாதிக்கும். தனி நபர்கள் அவசர தேவைக்கு கேட்கும் கடன்கள் கூட பெறமுடியாமல் போக வாய்ப்புள்ளது.

விதிமுறையற்ற விசாரணைஇனி இருக்காது



ராமச்சந்திரன்: பெரும்பாலான தனியார் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டு பொருள் மீதான கடன்களை குறிப்பிட்ட பொருள் மதிப்பில் ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு கடன் தருகின்றன. சில தவணைகள் செலுத்திய பின்பும், அதைப் பொருட்படுத்தாமல் பொருட்களை எடுத்துச் சென்று ஏலம் விடுவதோடு மீதி தொகையையும் தருவதில்லை. சிலவற்றில் கூடுதல் தொகை கூட வசூலிக்கப்படுகிறது. சில வழக்குகளில் விதிமுறைகள் இல்லாத தீர்ப் பாயங்கள் மூலம் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கப்படுகிறது. அதன் மீது அப்பீல் செய்ய ஐகோர்ட் தான் செல்ல வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் இனி ஏற்படாது.

பொய்ப்புகார் தருவதற்கும் வாய்ப்பு



மணிவண்ணன்: தேசிய வங்கிகள், பதிவு பெற்ற நிதி நிறுவனங்கள் உரிய விதிமுறைகளின் படி கடன் வழங்கி, அதை வசூலிக்கின்றன. மற்ற வகையிலான நிறுவனங்களில், கடன் வசூல் குறித்த புகார்கள் வரும் போது, அந்த வழக்குகள் மீது காலக்கெடு நிர்ணயித்து தீர்வு காணப்பட வேண்டும். கடன் தரும் நிதி நிறுவனங்களின் பாதுகாப்புக்கும் இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டும். கடன் செலுத்தாத நபர், திட்டமிட்டே தனது இடத்துக்கு நிறுவனத்தினரை வரவழைத்து பிரச்னை ஏற்படுத்தி, பொய்யான புகார் தரவும் வாய்ப்புள்ளது. வழக்குகளின் போது, விதிகளுக்குட்பட்ட வட்டி விகிதங்களை மட்டுமே, கோர்ட் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடன் கொடுத்தவர்களின் பாதுகாப்பும் முக்கியம்



பாபு சண்முக வடிவேல்: வங்கிகள், பதிவு செய்த நிதி நிறுவனங்கள் தங்களின் வராக்கடன்கள் குறித்து இவை தீர்ப்பாயங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கின்றன.நடுத்தர, சிறிய நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் வசூலில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

தற்போது நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி வங்கிகளும் கூட அடியாட்களைக் கொண்டு கடன் வசூலில் ஈடுபடுகின்றன. இதுபோன்ற பிரச்னைகளால் தற்கொலை, ஊரை விட்டு மாயமாதல் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. கடன் கொடுத்தவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த மசோதாவில் உரிய ஷரத்துகள் சேர்க்கப்பட வேண்டும்.

Advertisement