ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் போக்குவரத்து போலீசார்

மதுரை: மதுரை நகர் போக்குவரத்து போலீசாரில் மாதந்தோறும் சிலர் ஓய்வுபெற்று வருவதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சித்திரை திருவிழா துவங்கிய நிலையில் கூடுதல் போலீசாரை நியமிக்க கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.ஐ.பி., வருகையின்போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துதல், திருவிழா காலங்களிலும், வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கும்போதும் போக்குவரத்து போலீசார் வெயில், மழையை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்தின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு துணைகமிஷனர், கூடுதல் துணைகமிஷனர், இரு உதவிகமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், 10 போக்குவரத்து ஸ்டேஷன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 3 போலீசார் வரை பணி ஓய்வு பெற்று வருகின்றனர். இப்படி 200 போலீசாரின் பணியிடங்கள் காலியாக உள்ளன. போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அண்ணாநகர், செல்லுார், திருநகர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஒரு ஸ்டேஷன்கூட உருவாக்க அனுமதி வழங்காதது அதிகாரிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பயிற்சி முடித்த போலீசார் பணியில் சேர்ந்ததும், ஆயுதப்படையில் இருந்து தேவையான எண்ணிக்கையில் போலீசார் போக்குவரத்து பிரிவில் நியமிக்கப்படுவர்'' என்றார்.

Advertisement