மினி ஸ்டேடியத்திற்கான வேலையை செய்தால் 'ஒலிம்பிக் கிராமம்' : ஆறு ஏக்கர் கிடைத்தும் சொதப்பலாக நடக்குது

மதுரை: சோழவந்தானில் முதல்வர் பெயரில் கட்டப்பட்டுள்ள மினி ஸ்டேடியத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இப்பகுதி மாணவர்களின் ஒலிம்பிக் கிராமமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் வீதம் ரூ.3 கோடி மதிப்பில் 200 மீட்டர் தடகள டிராக், வாலிபால், கபடி, கூடைபந்து அரங்குகள், கழிப்பறை, ஜிம் பிற வசதிகளுடன் உருவாக்குவதென இரண்டாண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. மதுரை வடக்கில் ரேஸ்கோர்ஸ் தவிர மீதியுள்ள 9 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டது. சோழவந்தானில் ஆறு ஏக்கரில் முழுமையான சுற்றுச் சுவருடன் மைதானம் உருவாக்கப்பட்டது. மைதானத்தின் உள்ளே இடதுபக்கத்தில் மின்கோபுரம் உள்ளதால் அப்பகுதியில் கட்டுமானம் இல்லை. வலது பக்கத்தில் ஜிம், 50 பேர் பார்க்கும் வகையிலான காலரி, கூடைபந்து அரங்கு, வாலிபால் அரங்கு உள்ளது. இடது பக்கத்தில் கபடி அரங்கும் 200 மீட்டர் தடகள டிராக் அருகில் நீளம் தாண்டுதல் டிராக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தலா 6 ஏக்கர் இடம் கிடைக்காமல் மினி ஸ்டேடியம் அமைக்க முடியாத நிலை உள்ளது. சோழவந்தானில் 6 ஏக்கர் மொத்தமாக கிடைத்துள்ளது இப்பகுதி மாணவர்கள், இளைஞர்களுக்கான வரப்பிரசாதம் தான் என்றாலும் முழுமையாக தயாராகவில்லை. மைதானம் முழுவதும் சரளை கற்களாக இருப்பதால் மாணவர்கள் தடகள பயிற்சி பெறவோ போட்டியில் பங்கேற்கவோ முடியாது. தடுக்கி விழுந்தால் காயம் நிச்சயம். கூடைபந்து அரங்கு மட்டும் சிமென்ட் தளமாக உள்ளது.
கபடி, வாலிபால் அரங்குகள் மண் தரையாக இருப்பதால் மழை பெய்தால் களை முளைத்து விடும் வாய்ப்புள்ளது. இதை முறையாக பராமரிக்க வேண்டும். மழை பெய்தால் மைதானத்தில் ஒதுங்க இடமில்லை என்பதால் சிறிய காலரியின் மேற்பகுதியில் தகர கூரை பொருத்தலாம். காலம் காலமாக மாணவர்கள் இம்மைதானத்தில் தான் விளையாட வேண்டும் என்பதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டாலும் சோழவந்தான் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இம்மைதானத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
மேலும்
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு