மணப்பாக்கம் ஊராட்சியில் குடிநீரின்றி கிராமத்தினர் தவிப்பு
செங்கல்பட்டு:மணப்பாக்கம் ஊராட்சியில் பகுதிவாசிகள் குடிநீரின்றி தவித்து வருவதால், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில் மணப்பாக்கம், உதயம்பாக்கம் ஆகிய கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்கள், பாலாற்றின் அருகில் அமைந்துள்ளன.
இங்குள்ளவர்களுக்கு, பாலாற்றில் இருந்து குழாய்கள் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, வீடுகளுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், பாலாற்று பகுதிக்கு சென்று, தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய பணி, வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குழாய் அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது.
தற்போது, ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பவதால், தண்ணீர் வினியோகம் தடைபடுகிறது.
குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் கிராமவாசிகள் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராமவாசிகள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில், வீடுகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டத்தில் பேசினர்.
அப்போது, பாலாற்றுக்கு அருகில் உள்ள தங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கோடைக்காலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பேசினர்.
அதன் பின், தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவும், குடிநீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வாக, குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.