கடனை அடைக்க ராட்சத கிரேனை திருடி 495 கி.மீ., 'ஆட்டம்' காட்டியவர் கைது

ஹூப்பள்ளி,: கடனை அடைப்பதற்காக ராட்சத கிரேனை ஓட்டி சென்று, 495 கிலோ மீட்டர் துாரம் போலீசாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது செய்யப்பட்டார்.

ஹூப்பள்ளி, ஹலியல் தாலுகா அஜகானை சேர்ந்தவர் ரகுநாத் கதம். இவர் சொந்தமாக, 'ஹைட்ராலிக் மொபைல் கிரேன்' வைத்து உள்ளார். 2,200 கிலோ எடையுடைய கிரேனை, கடந்த 27ம் தேதி, தாரிஹால் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்து கிரேனை ஓட்டி செல்ல வந்தார். அப்போது, கிரேனை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தில் விசாரித்து உள்ளார். அங்கிருந்த சிலர், யாரோ ஒருவர் கிரேனை ஓட்டி சென்றதாக கூறி உள்ளனர்.

இதை கேட்டு அதிர்ந்த ரகுநாத், உடனடியாக ஹூப்பள்ளி கிராமப்புற போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரேன் திருட்டு போய் விட்டதாக கூறினார்.

கேமரா காட்சிகள்



இன்ஸ்பெக்டர் முருகேச சென்னன்னவர் தலைமையில் விசாரணை துவங்கியது. முதல் கட்டமாக கிரேன் நிறுத்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகத்தை துணியால் மூடியிருந்த நபர், கிரேனை ஓட்டி சென்றது தெரிய வந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள், அப்பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து தகவல்களை கேட்டு கிரேன் சென்ற சாலையில், போலீஸ் குழுவினர் ஜீப்பில் சென்றனர். கிட்டத்தட்ட 400 கி.மீ.,க்கும் மேல் தேடி சென்றனர். தேடுதல் வேட்டை, 50 மணி நேரத்தையும் தாண்டியது. இருப்பினும், கிரேனை காணவில்லை.

இறுதியாக ஹுப்பள்ளியின் அண்டை மாவட்டமான உத்தர கன்னடா, எல்லாப்பூர் அருகே உள்ள ஹல்லிகேரி கிராஸில் நேற்று முன்தினம், கிரேனை கண்டு பிடித்தனர்.

அதை ஓட்டி நபரை கைது செய்தனர்; கிரேனை மீட்டனர். மொத்தம் 495 வது கிலோ மீட்டரில் கிரேன் திருடனை பிடித்தனர்.

கிராமப்புறங்களில்



விசாரணையில், அவர் ஹூப்பள்ளி, கானாபூர் தாலுகா, நந்தகாட்டை சேர்ந்தவர் சைபுல்லா முல்லா, 32, என்பது தெரிய வந்தது.

கடன் தொல்லை காரணமாக கிரேனை திருடி, விற்க திட்டமிட்டு, போலீசிடம் இருந்து தப்பிக்க முகத்தில் துணி கட்டியதாகவும், தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் வழியாக செல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் வழியாக கிரேனை ஓட்டி சென்றதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில், 72 மணி நேரத்திற்குள் விரைந்து குற்றவாளியை கைது செய்த, இன்ஸ்பெக்டர் முருகேச சன்னன்னவர் தலைமையிலான போலீசாருக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி., கோபால் பியாகோட் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

வழக்கமாக கிரேன் மெதுவாக தான் இயக்கப்படுவது வழக்கம். எப்படி ஓட்டி சென்றார் என்பது குறித்து போலீசார் மேலும் தகவல்களை கேட்டு வருகின்றனர்.

படவிளக்கம்

போலீசார் கைது செய்த சோகத்தில் அமர்ந்திருக்கும் கிரேனை திருடிய சைபுல்லா முல்லா.

Advertisement