அரசு மருத்துவமனை எதிரே நிழற்குடை இல்லாமல் அவதி

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் சாலையில் கோனேட்டம்பேட்டையில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை.
இந்த மருத்துவமனைக்கு பள்ளிப்பட்டு, கோனேட்டம்பேட்டை, நெடியம், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலம், நகரி ஒட்டிய கிராமங்களை சேர்ந்த பகுதிவாசிகளும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மார்க்கத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு வருபவர்கள், ஷேர் ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர்.
மருத்துவமனை நுழைவாயில் எதிரே சாலையோரத்தில் காத்திருந்து பயணிக்கின்றனர்.
இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வருபவர்களும், பகுதிவாசிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனை எதிரே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.