'பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகளை தேடித்தேடி வேட்டையாடுவோம்'

1

புதுடில்லி: “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும் தேடித்தேடி வேட்டையாடுவோம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சூளுரைத்தார்.

ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் பைசரன் சுற்றுலா தலத்தில் 26 அப்பாவிகளை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து, இந்தியா -- பாக்., இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

பயங்கரவாதிகளை குறிபார்த்து அழிக்க, முப்படைகளுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை பகிரங்கமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அதிரடியாக பேசினார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருடன் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி முதல்வரான பா.ஜ.,வைச் சேர்ந்த ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். அதில், பஹல்காமில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின், அமித் ஷா பேசியதாவது:

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும், தப்பிக்க முடியாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு காரணமான ஒவ்வொரு வரையும் தேடித்தேடி வேட்டையாடுவோம். 26 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, வெற்றி பெற்றதாக நினைக்காதீர்கள்.

உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும். தாக்குதலில் தொடர்பு உடைய ஒவ்வொருவருக்கும் தெளிவான, தேர்ந்தெடுக்கப்பட்ட பதிலடி கொடுக்கப்படும்; இது, நரேந்திர மோடி அரசு; யாரும் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement