சிந்தனைக்களம்: இஸ்ரேல் மாடல் தாக்குதல் பாகிஸ்தான் மீது நடக்குமா?

காஷ்மீரில் உள்ள பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர், 25 உட்பட, 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவத்தால், பிரதமர் மோடி உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அதனால், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தான் மீது, இந்தியா தாக்குதல் நடத்தலாம். அந்த தாக்குதலானது, இஸ்ரேல் பாணியில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


அதாவது, இஸ்ரேல் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அந்த எதிரிகள் மீது ஈவு, இரக்கமே காட்டாமல், இஸ்ரேல் ராணுவத்தினர் வலிமையான பதிலடி கொடுப்பர். அது, நாம் ஏன் வம்புக்கு சென்றோம் என, எதிரிகள் கதறி அழும் அளவுக்கு இருக்கும். அத்துடன், தங்கள் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்ட கூட்டத்தையே, இஸ்ரேல் நாட்டினர் சிதைத்து, அழித்து விடுவர். எதிரிகளின் இருப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டமைப்புகளையும் துாள் துாளாக்கி விடுவர். அதனால் தான், இஸ்ரேலின் வலிமையை அறிந்த அண்டை நாடுகளான, லெபனான், சிரியா, ஈராக் போன்றவை அஞ்சி நடுங்குகின்றன.


இஸ்ரேல் நாட்டு உளவு அமைப்பின் பெயர் மோசாட். இந்த அமைப்பினர், எதிரிகளை கொன்று, அவர்களின் உடலை எரிக்கும் வரை அல்லது புதைக்கும் வரை பார்த்துக் கொண்டிருப்பர். இஸ்ரேலின் மற்றொரு பிரிவு சுராத்ஹாடின். இந்த அமைப்பினர், எதிரி நாடுகளின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்குவதில் கெட்டிக்காரர்கள். இஸ்ரேலின் சைபர் பிரிவோ, இணைய வழி தாக்குதலையும், உளவியல் ரீதியான தாக்குதலையும் இடைவிடாமல் நடத்தும் திறன் படைத்தது.


இஸ்ரேல் நாட்டினர், பல நுாற்றாண்டுகளாக, ஜெருசலேமை தங்களுக்கு சொந்தமான பகுதியாக மாற்ற ஆசைப்பட்டனர். அதற்கு ஏற்றார் போல, 1967ல் அரபு நாடுகள் அனைத்தும் சேர்ந்து இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. இந்தப் போரில், இஸ்ரேல் வெற்றி பெற்று ஜெருசலேத்தை கைப்பற்றி தனதாக்கியது. அதுபோல, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை, இந்தியா கைப்பற்றும் என, இந்திய மக்களும், உலகில் உள்ள புவிசார் நோக்கர்களும் நம்புகின்றனர்.


கடந்த, 1971ல் நடந்த, இந்தியா - பாகிஸ்தான் போர், வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்தது. அதுபோல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், இந்தியாவோடு இணைக்கப்பட வேண்டும் என, பலரும் விரும்புகின்றனர். 1971 போரில், இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான், தங்களின் உளவு அமைப்புகள் வாயிலாக, லஷ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை துாண்டி விட்டும், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்தும், பல ஆண்டுகளாக பல சதித்திட்டங்களை அரங்கேற்றி உள்ளது. நம் நாட்டில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கும் பாக்., ஆதரவுடன் செயல்பட்ட பயங்கரவாதிகளே காரணம்.


இந்தியா - பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த முந்தைய போரின் போது, பல நாடுகள் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்தன; கண்டனம் தெரிவித்தன. இன்றைக்கு அந்த நாடுகள் எல்லாம், இந்தியாவுக்கு ஆதரவான நாடுகளாக மாறியுள்ளன. அதற்கு பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளே காரணம்.


கடந்த, 2016 செப்டம்பர், 28ல், யூரி ராணுவ முகாம் மீது பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. 2019 பிப்ரவரி, 14ல் புல்வாமா தாக்குதல், ஜெய்ஸ் - இ - முகமது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, 2019 பிப்ரவரி, 26ல், இந்தியாவின் மிராஜ் 2000 போர் விமானங்கள், ஜெய்ஸ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில், 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


எனவே, பஹல்காமில் சுற்றுலா பயணியர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கடும் கோபம் அடைந்துள்ள இந்திய அரசு, பாகிஸ்தான் மீது அல்லது பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி முகாம்கள் மீது விரைவில் தாக்குதலை நடத்தலாம். அந்த தாக்குதல் இஸ்ரேல் பாணி தாக்குதலாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது.


- டாக்டர். அர்த்தநாரி பிரபுராஜ்

Advertisement